சனி, மார்ச் 08, 2014

தேர்தல் மைதானத்தில் அரசியல் கட்சிகள்



ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்பவர்களுக்கும், அதைப்பார்ப்பவர்களுக்கும் நன்றாக தெரியும். ஓட்டப்பந்தயம் தொடங்குவதற்கு முன்பு, வீரர்கள் அனைவரும் மைதானத்தில் நிற்பார்கள். ‘ஆன் யுவர் மார்க்’ என்று நடுவர் சொன்னவுடன் பந்தயம் தொடங்குவதற்காக போடப்பட்டிருக்கும் கோட்டின் அருகே நிற்பார்கள். ‘செட்’ என்று சொன்னவுடன் கோட்டின் முன் காலை வைத்து எந்த நேரத்திலும் ஓட தொடங்குவதற்கு துடிதுடிப்புடன் தயாராக இருப்பார்கள். ‘கோ’ என்று நடுவர் சொன்னவுடன், ஓடதொடங்குவார்கள். ‘பினிஷிங் லைன்’ என்று கூறப்படும் பந்தயம் முடிவாகும் இடத்தில் போடப்பட்டுள்ள கோட்டையார் முதலில் தாண்டுகிறார்களோ, அவர்கள் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.


16–வது பாராளுமன்றத்திற்கான தேர்தலை பொருத்தமட்டில், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 24–ந்தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு காங்கிரஸ் கட்சியைத்தவிர, அனைத்துக்கட்சிகளிலும் தொடங்கிவிட்டது.  


1996 முதல் மத்தியில் எந்த கட்சியுமே தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவில்லை. அப்போது இருந்து கூட்டணி அரசாங்கம் மத்தியில் தொடங்கியது. பொதுவாக உத்திரபிரதேசம், மராட்டியம், தமிழ்நாடு, பீகார், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய 6 மாநிலங்களில் வெற்றிபெறும் கட்சிகள்தான் மத்தியில் யார் ஆட்சியை அமைப்பார்கள் என்பதை உறுதி செய்கிறது. அந்தவகையில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் யார் ஆட்சியை அமைக்கப்போகிறார்கள்? மோடி அலை பா.ஜ.க.வுக்கு பயன்படப்போகிறதா?, காங்கிரஸ் கட்சியா?, அல்லது மாநில கட்சிகளின் தலைவர் ஒருவர் தலைமையில்தான் ஆட்சி அமையப்போகிறதா? என்று அரசியல் அரங்கில் அன்றாடம் பேசப்படும் பரபரப்பான காட்சியாகும். பொதுவாக தமிழக அரசியலை பொருத்தமட்டில், நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை என்று கூறுவது ஒவ்வொரு தேர்தலிலும் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
தேர்தல் அரங்கில் மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாட்டில் ஒரு தெளிவான நிலை ஏற்பட்டுவிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னே அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா, 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, தன் சூறாவளி சுற்றுப்பயணத்தை வெளியிட்டு, தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில் இருந்தே நிச்சயமாக ஒரு பெரிய கணக்கை போட்டு இருக்கிறார் என்பது புரிந்துவிட்டது.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் இல்லை. எனவே, அவர்கள் வெளியே நின்று தனியாக நிற்கப்போகிறார்களா?, அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்போகிறார்களா? என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டு, உடன்பாடும் கையெழுத்தாகியுள்ளது. ஆக, தி.மு.க.வை பொருத்தமட்டில், கம்யூனிஸ்டு கட்சிகள் வந்தால் அவர்களையும் சேர்த்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவது, இல்லையென்றால், தங்களுடன் இருக்கும் இந்த 4 கட்சிகளை வைத்துக்கொண்டே போட்டியிடுவது என்று முடிவில் இருக்கிறார்கள். பா.ஜ.க.வை பொருத்தமட்டில், தங்களது பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. கட்சிகள் கூட்டணியில் இருப்பது என்று முடிவான நிலையில் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்படி எல்லா அணியிலும் யார்–யார் சேரப்போகிறார்கள்?, யாருக்கு எத்தனை இடம்? என்று ஒரு பரபரப்பான நிலை நிலவிக்கொண்டிருக்கும்போது, காங்கிரஸ் கட்சி மட்டும் ‘அம்போ’ என்று நிற்கிறது. தி.மு.க. சேர்க்கமாட்டார்களா? மற்ற கட்சிகள் சேரமாட்டார்களா? என்று வாசலை திறந்து வைத்துக்கொண்டிருந்தாலும், காங்கிரசுடன் கூட்டணி வைக்க தமிழகத்தில் யாரும் தயாராக இல்லை.
ஒரு பாரம்பரியமிக்க கட்சிக்கு இப்படி தனி மரமாக நிற்கிற நிலை, அரசியலில் இதுவரை இருந்ததில்லை. ஆக, மொத்ததில் தமிழ்நாடு தேர்தல் அரங்கில் ‘ஆன்யுவர் மார்க்’ என்ற நிலையில், எல்லா கட்சிகளும் தயாராகிவிட்டார்கள். கூட்டணி எல்லா கட்சிகளிலும் முடிவானவுடன், ‘செட்’ என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள். தேர்தல் பிரசாரத்தை தொடங்கி, தேர்தலை சந்திக்கும் பந்தயத்தில் யார் வெற்றிபெற போகிறார்கள்? என்பதை மே 16 காட்டிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக