சனி, மார்ச் 15, 2014

மொத்த விலை பண வீக்கம் 4.68 சதவீதமாக குறைவு


உணவு பொருட்களுக்கான மொத்தவிலை பண வீக்கம் கடந்த பிப்ரவரியில் அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 8.8 சதவீதத்தில் இருந்து 8.12 சதவீதமாக குறைந்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே பண வீக்கம் குறைந்து வருகிறது.

நேற்று வெளியிடப்பட்ட ஆண்டு அடிப்படையிலான கணக்கீட்டின்படி மொத்த விலை பண வீக்க பட்டியலின்படி வெங்காயம் 20.06 சதவீதமாகவும், தக்காளி 8.36 சதவீதமாகவும் ஆகியுள்ளது. ஆனால், மொத்த காய்கறி விலையானது கடந்த பிப்ரவரியில் 3.99 சதவீதமாக குறைந்துள்ளது. ஜனவரியில் இது 16.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



உணவு தானியங்கள், கோதுமை விலை குறைந்துள்ள அதே நேரத்தில், பழங்கள், பால், புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளான முட்டை, மீன் மற்றும் மாமிசம் விலை முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், பண வீக்கமானது பழங்களுக்கு 5.32 சதவீதத்தில் இருந்து 9.92 சதவீதமாகவும், பால் 7.22 சதவீதத்தில் இருந்து 8.45 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. சர்க்கரை 2.76 சதவீதத்திலேயே உள்ளது. கடந்த 2013 மே மாதத்தில் மொத்தவிலை பண வீக்கம் 4.58 சதவீதமாக இருந்தது. பின்னர் அதிகரித்து வந்த பண வீக்கம், கடந்த மாதத்தில் 4.68 சதவீதமாக குறைந்துள்ளது.

பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. தற்போது, மொத்த விலை பண வீக்கம் குறைந்துள்ளதால், அடுத்த மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நிதி கொள்கையில், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வட்டிவிகிதங்கள் குறைக்கப்படலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக