சனி, மார்ச் 15, 2014

உலக சதுரங்க தகுதி சுற்று: 2-வது சுற்றில் ஆனந்த் டிரா


2014-ம் ஆண்டுக்கான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷியாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது.

இதில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், டிமிட்ரி ஆன்ட்ரீகின் (ரஷியா), விளாடிமிர் கிராம்னிக் (ரஷியா), செர்ஜி கர்ஜகின் (ரஷியா), பீட்டர் ஸ்விட்லர் (ரஷியா), ஷக்ரியர் நேம்ட்யாரோவ் (அஜர்பைஜான்), வெஸ்லின் தபலோவ் (பல்கேரியா), லெவோன் ஆரோனியன் (அர்மேனியா) ஆகிய 8 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.



ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 14 சுற்று நடைபெறும். முதலிடத்தை பிடிக்கும் வீரர் கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார். நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், முன்னாள் உலக சாம்பியன் வெஸ்லின் தபலோவ்வை (பல்கேரியா) சந்தித்தார்.

இந்த ஆட்டம் 54-வது காய்நகர்த்தலில் டிராவில் முடிந்தது. மற்ற ஆட்டங்களில் ரஷிய வீரர் விளாடிமிர் கிராம்னிக், சக வீரர் செர்ஜி கர்ஜகினை வீழ்த்தினார். 2-வது சுற்று முடிவில் இந்திய வீரர் ஆனந்த், ரஷிய வீரர் பீட்டர் ஸ்விட்லர், ரஷிய வீரர் விளாடிமிர் கிராம்னிக் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக