சனி, மார்ச் 15, 2014

பங்கு வியாபாரம் ‘சென்செக்ஸ்’ 35 புள்ளிகள் உயர்வு

பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 35 புள்ளிகள் உயர்ந்தது.

ஏற்றுமதி
ஏழு மாதங்கள் தொடர் வளர்ச்சிக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 3.67 சதவீதம் குறைந்தது. மேலும் பொருளாதார வளர்ச்சியும் குறைந்துள்ளது. கோர் இன்ஃப்ளேஷன் எனப்படும் அடிப்படை பணவீக்கம் உயர்ந்துள்ளதால் ரிசர்வ் வங்கி முக்கிய கடன் வட்டி விகிதங்களை குறைக்காது என சில நிபுணர்கள் தெரிவித்தனர். சர்வதேச அளவிலும் பங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. எனவே, காலையில் வர்த்தகம் தொடங்கியதும் ‘சென்செக்ஸ்’ 200 புள்ளிகளை இழந்திருந்தது. வங்கி, ஐ.டி. ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின. மிட்கேப் குறியீட்டு எண் 0.23 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீட்டு எண் 0.34 சதவீதமும் குறைந்தது.
எனினும், பிப்ரவரியில் மொத்த விலை பணவீக்கம் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு 4.68 சதவீதமாக குறைந்துள்ளது என்ற செய்தி முதலீட்டாளர்களுக்கு நிம்மதி அளிப்பதாக அமைந்தது. இதனையடுத்து பொறியியல், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கினர்.


அன்னிய நிதி நிறுவனங்கள்
இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இந்நிறுவனங்கள் ரூ.616.62 கோடிக்கு பங்குகளை வாங்கின. அதேசமயம், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் ரூ.314.40 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்தன. ‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் டீ.எல்.எஃப்., ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், பீ.எச்.இ.எல்., என்.எம்.டீ.சி., எல்&டி, உள்ளிட்ட 15 நிறுவனங்களின் பங்கு விலை மிகவும் உயர்ந்தது. அதேசமயம் ரான்பாக்சி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், விப்ரோ, ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 14 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. டாட்டா பவர் நிறுவனத்தின் பங்கு விலையில் மாற்றம் ஏற்படவில்லை.
வர்த்தகம் முடியும்போது ‘சென்செக்ஸ்’ 35.19 புள்ளிகள் உயர்ந்து 21,809.80 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 21,853.32 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 21,573.48 புள்ளிகள் வரையிலும் சென்றது.

நிப்டி
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிஃப்டி’ 11.10 புள்ளிகள் அதிகரித்து 6,504.20 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 6,518.45 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 6,432.70 புள்ளிகளுக்கும் சென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக