வியாழன், ஏப்ரல் 10, 2014

ஐநாவின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது இலங்கை அமைச்சர் மறுப்பு

இலங்கையில் விடுதலைபுலிகளுக்கு எதிரான போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான போர் குற்றங்கள் குறித்து ஐநாவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என்று இலங்கை அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் விடுதலை புலிகளுடனான இறுதி கட்ட போரின் போது, 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேச நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

 இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை இலங்கையில் ஆய்வு நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பித்தார். இதனையடுத்து கடந்த மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமை மாநாட்டில் நவி பிள்ளையின் அறிக்கையையொட்டி இலங்கையில் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சுதந்திர விசாரண நடத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றின. இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்காத போதும் பெரும்பாலான நாடுகளின் ஆதரவால் தீர்மானம் வெற்றி பெற்றது.

 இந்த தீர்மானத்தின்படி விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஐநா அறிவித்தது. இலங்கை அதிபர் ராஜபக்சே மறுத்துவிட்டார். இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் தெரிவிக்கையில், ஐநாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கைக்கு உத்தரவிட ஐநாவுக்கு அதிகாரமில்லை. எனவே ஐநாவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக