மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வாக்கு கேட்க வந்து இருப்பதாக மு.க.ஸ்டாலின் பேசினார்.
மு.க.ஸ்டாலின் பிரசாரம்
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்தியமந்திரி தயாநிதிமாறனை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரசாரம் செய்தார். துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மன்கோவில் தெருவில் பிரசாரத்தை மேற்கொண்டார். தொடர்ந்து அவர் ஏழு கிணறு சந்திப்பு, மண்ணடித்தெரு, தம்புச்செட்டி தெரு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட் அருகே பிரசாரம் செய்ய வந்த மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;–
கடந்த 3 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், அ.தி.மு.க. வேட்பாளர்கள் தொகுதி பக்கமே செல்லமுடியவில்லை. மக்கள் அவர்களை விரட்டியடிக்கிறார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் மக்களை சந்திக்க அச்சப்படுகிறார். அதனால்தான், ஹெலிகாப்டரிலேயே பறந்துவந்து பிரசாரம் செய்துவிட்டு செல்கிறார்.தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா சொன்ன எந்த வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை. ஆட்சி பொறுப்பேற்றவுடன் 3 மாதத்தில் மின் தட்டுப்பாட்டை தீர்ப்பேன் என்றார். ஆனால், மின்சாரம் இல்லாத மாநிலமாகத்தான் அவர் தமிழகத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டது. அதில், 6 மாத காலம் சட்டசபையும் நடந்தது. அ.தி.மு.க. உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அப்போது ஏன் புதிய சட்டசபைக்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் புதிய தலைமை செயலக கட்டிடத்தை கிடப்பில் போட்டது ஏன்?.
தி.மு.க. ஆட்சியில்...
இன்றைக்கு கோட்டை என்பது கோடநாடாகத்தான் இருக்கிறது. கோப்புகளில் அதிகாரிகள் கையெழுத்து பெற வேண்டும் என்றால் கோடநாட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது. இதுதான் ஒரு நல்லாட்சியா?. இதற்கு நீங்கள் அவருக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் புதிய பூங்காக்களை அமைத்தோம். மேம்பாலங்களை கட்டினோம். சிறு சிறு பாலங்களையும் கட்டினோம். சென்னை நகரை சிங்கார சென்னையாக மாற்றினோம். ஆனால் இப்போது சென்னை நகரம் எப்படி உள்ளது என்பதை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி காட்டும் ஒருவரே பிரதமராக வரவேண்டும். மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக