செவ்வாய், ஏப்ரல் 08, 2014

அமித்ஷாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு சர்ச்சைக்குரிய பேச்சுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு

பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளரும், குஜராத் முதல்–மந்திரியுமான நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் அமித்ஷா. குஜராத் முன்னாள் உள்துறை மந்திரியான இவர், தற்போது, உத்தரபிரதேச மாநில பா.ஜனதா பொறுப்பாளராக இருக்கிறார்.

இவர், உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி, பிஜ்னோர், முசாபர்நகர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது.முசாபர்நகர் கலவரத்தை மேற்கோள் காட்டி, ‘இந்த தேர்தல் நமது கவுரவத்துக்கான தேர்தல். நம்மை அவமானப்படுத்தியதற்கு பழிவாங்கும் தேர்தல். அநீதி இழைத்ததற்கு பாடம் கற்பிக்கும் தேர்தல்’ என்று அவர் பேசினார்.
இப்பேச்சு, இரு மதத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி, தேர்தல் கமிஷனில் புகார் செய்தது. மேலும், அமித்ஷா மீது போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்தனர்.
நோட்டீசு
இதற்கிடையே, அமித்ஷாவின் பேச்சை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்தது. இந்நிலையில், அவருக்கு நேற்று நோட்டீசு அனுப்பியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தங்களது பிரசார உரையை ஆய்வு செய்தபோது, தாங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இருப்பது, மேலெழுந்தவாரியாகவே தெரிவதாக தேர்தல் கமிஷன் கருதுகிறது.ஆகவே, தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு, 9–ந் தேதி மாலை 5 மணிக்குள் தாங்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், மேற்கொண்டு தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், தேர்தல் கமிஷன் இவ்விஷயத்தில் உரிய முடிவு எடுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விதிமீறல்
‘வெவ்வேறு சாதி, மத, மொழி மக்களிடையிலான கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தி, பதற்றத்தையும், விரோதத்தையும் உருவாக்கும்வகையில் எந்த கட்சியும், வேட்பாளரும் பேசக்கூடாது. மாற்றுக்கட்சியினரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கக்கூடாது’ என்ற தேர்தல் நடத்தை விதிமுறையை அமித்ஷா மீறி இருப்பதாக தேர்தல் கமிஷன் தனது நோட்டீசில் சுட்டிக்காட்டி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக