தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் விவகாரத்தில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. அந்நாட்டு அரசை தவறாக புரிய வைத்தது என்று செனட் குழுவின் அறிக்கை கூறுகிறது. சி.ஐ.ஏ. காவலில் எடுத்தவர்களை கொடூரமாக சித்திரவதை செய்ததற்கு அளித்த விளக்கங்கள் தவறானவை என்று செனட் குழுவின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
6300 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. சி.ஐ.ஏ.வின் சித்திரவதை தந்திரங்கள் அல்காயிதா தலைவர்களை குறித்த தகவல்களை பெற உதவவில்லை. தங்களுக்கு கிடைத்த தகவல்கள்தாம் 2011-ஆம் ஆண்டு உஸாமா பின் லேடனை கொலை செய்வதற்கு வழி வகுத்தது என்ற சி.ஐ.ஏ.வின் வாதம் சரியல்ல என்று அறிக்கை கூறுகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான சி.ஐ.ஏ.வின் நடவடிக்கையை முக்கியமான நகர்வுகளாக அவர்கள் சட்ட அமைச்சகத்தையும், அமெரிக்க காங்கிரஸையும் நம்ப வைத்தனர்.
தீவிரவாத தாக்குதலின் இலக்குகளை தகர்க்கவும், அமெரிக்க குடிமக்களை பாதுகாக்கவும் இதன் மூலம் சாதித்ததாக சி.ஐ.ஏ. உரிமை கோருகிறது. தாக்குதல் முயற்சிகள் தொடர்பாக ஏராளமான தகவல்கள் தங்களின் பணிகள் காரணமாக கிடைத்ததாக சி.ஐ.ஏ. அரசுக்கு தெரிவித்தது. இதுவெல்லாம் முற்றிலும் சரியானது அல்ல என்று செனட் அறிக்கை கூறுகிறது.
காவலில் எடுத்தவர்களை பல ஆண்டுகள் சித்திரவதை செய்துள்ளனர். தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இந்நடவடிக்கைகளுக்கு முன்னால் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் அரசு அதிகாரம் வழங்கியது. தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா, 2009-ஆம் ஆண்டு இத்தகைய சித்திரவதை மையங்களையும், விசாரணை முறைகளையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
தாய்லாந்தில் சி.ஐ.ஏ.வுக்கு சொந்தமான ரகசிய மையத்தில் கொடிய சித்திரவதைகள் அரங்கேறின. பல நாட்கள் தூங்க அனுமதி மறுத்தல், குளிரான நீரில் அதிக நேரம் மூழ்க வைத்தல் உள்ளிட்ட சித்திரவதைகள் வழக்கமாக நடைபெற்றது. கூடுதல் தகவல்கள் கிடைக்காது என்று தெரிந்த பிறகும் பல சிறைக்கைதிகளையும் தொடர்ந்து சித்திரவதை செய்ய சி.ஐ.ஏ. உத்தரவிட்டது.
அல்காயிதா தொடர்பான விபரங்கள் அமெரிக்க அதிகாரிகளுக்கு 2002-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்ட அபூசுபைதாவிடமிருந்து கிடைத்தது. எஃப்.பி.ஐ. அதிகாரிகள் பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் வைத்து அவரை விசாரித்தபோது இத்தகவல்கள் கிடைத்தன. அதற்கு முன்பு அவரிடம் சி.ஐ.ஏ. விசாரணை நடத்தியபோதும் போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை.
செனட்டின் அறிக்கையை பகுதியளவில் வெளியிட செனட் விசாரணைக் குழுவின் தலைவர் டானி ஃபீன்ஸ்டீன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிக்கை வெள்ளை மாளிகைக்கு சமர்ப்பிக்கும் முன்பு நாளை குழுவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக