சனி, ஏப்ரல் 12, 2014

மதுரை வெடிகுண்டு சம்பவங்கள்: உளவுப்பிரிவு போலீசார் மீது குற்றச்சாட்டு போலீஸ் சூப்பிரண்டு எழுதிய கடிதம், ஐகோர்ட்டில் தாக்கல்

மதுரை வெடிகுண்டு சம்பவங்களில் விசாரணையை திசை திருப்பியதாக உளவுப்பிரிவு போலீசார் மீது குற்றச்சாட்டுக்களை கூறி மதுரை போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் டி.ஜி.பி.க்கு எழுதிய கடிதம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொய் வழக்குகள்
மதுரை சுங்கம் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் செய்யது அப்துல்காதர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மாவட்ட வக்கீல் அணி தலைவராக உள்ளார். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்களையும், முஸ்லிம் வக்கீல்களையும் சித்ரவதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் மதுரையில் வெடிகுண்டு நாடகம் நடத்தி வருகின்றனர். அதாவது, போலீசாரே வெடிகுண்டுகளை வைத்து விட்டு, அவற்றை கண்டுபிடித்து பறிமுதல் செய்வது போல் நடித்து, அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகளை போட்டு அவர்களை சிக்க வைத்து வருகின்றனர்.
வெடிகுண்டு வழக்கு விசாரணையில் சிறப்பு புலனாய்வு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் பல்வேறு தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மதுரையில் நடந்த வெடிகுண்டு வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ஆட்சேபம்
இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள தங்களது பெயரை நீக்க வேண்டும் என்று மாரிராஜன், கார்த்திகேயன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு, ஆட்சேபம் தெரிவித்து மனுதாரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் மதுரை போலீஸ் கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி உள்ள விவரங்களுக்கு மறுப்பு தெரிவித்து மனுதாரர் மற்றொரு மனுதாக்கல் செய்துள்ளார்.
நேற்று அந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், முகமது அப்பாஸ் ஆகியோர் ஆஜராகி வாதாடினார். விசாரணையின் போது வெடிகுண்டு சம்பவங்கள் தொடர்பாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பாலகிருஷ்ணன், போலீஸ் டி.ஜி.பி, கூடுதல் போலீஸ் டி.ஜி.பி ஆகியோருக்கு எழுதி உள்ள கடிதங்கள் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:–
வழிப்பறி வழக்கில் அவனியாபுரம் போலீசாரால் செய்யது வகாப், இஸ்மத் ஆகியோர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். இதில், இஸ்மத் அத்வானி சென்ற வழியில் குண்டு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். செய்யது வகாப், வெடிகுண்டு வழக்குகளை விசாரித்து வரும் சென்னையை தலைமையிடமாக கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.டி), எஸ்.ஐ.டி, எஸ்.ஐ.சி உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுப்பவராக செயல்பட்டு வந்தார். இதன்காரணமாக அவர், உளவுப்பிரிவு போலீசாருடன் நெருக்கமாக இருந்து வந்தார்.
இதை அவர் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பல்வேறு கட்டப்பஞ்சாயத்து வேலைகளை செய்து வந்தார். எஸ்.ஐ.சி உளவுப்பிரிவில் ஏட்டாக பணியாற்றி வரும் விஜயபெருமாள் என்பவர் செய்யது வகாப்புக்கு துணையாக இருந்து வருகிறார். இவரைப் போன்றவர்கள் வெடிகுண்டு சம்பவங்கள் நடக்க ஒரு பாதையாக இருந்து வருகின்றனர். இவர்கள் முஸ்லிம் அடிப்படைவாதிகள் வளர ஒரு சக்தியாக இருக்கின்றனர். எனவே, போலீஸ் துறையின் புனிதத்தை காக்கும் வகையில் விஜயபெருமாள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவையில்லாத குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்பகுதியில் உள்ள சிக்கந்தர் தர்காவில் வெடிமருந்து பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் அடங்கிய சிறப்புப்படை அமைக்கப்பட்டது. இவர்கள், எனது நேரடி கண்காணிப்பில் பணியாற்றி வந்தனர். சென்னையை தலைமையிடமாக கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.டி), எஸ்.ஐ.சி, எஸ்.ஐ.டி ஆகிய உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுப்பவர்கள் (இன்பார்மர்) வெடிகுண்டு சம்பவங்களுக்கு பின்னணியில் இருப்பது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தலைமையிலான சிறப்புப்படைக்கு தெரியவந்தது. இதன்காரணமாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுப்பவர்களை பிடித்து விசாரிக்க சிறப்புப்படை முடிவு செய்தது.
இதை அறிந்த உளவுப்பிரிவு போலீசார், சிறப்புப்படையினருக்கு தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை கூறினர். மேலும், சிறப்புப்படையினருக்கு தகவல்களை அளித்து வந்தவர்களுக்கு உளவுப்பிரிவு போலீசார் தொந்தரவு கொடுத்தனர். இதன்காரணமாகவே சிறப்புப்படை, உளவுப்பிரிவு போலீசாருக்கு இடையே விசாரணையில் பிளவு ஏற்பட்டது.
தப்பிக்க வழி
இன்ஸ்பெக்டர் மாடசாமி, வெடிகுண்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் சரியான பாதையில் விசாரணையை மேற்கொண்டு வந்தார். வெடிகுண்டு வழக்குகளில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்த இன்ஸ்பெக்டர் மாடசாமி அதை நிரூபிக்கும் வகையில் வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களையும் சேகரித்து இருந்தார்.
இந்தநிலையில் தான் இன்ஸ்பெக்டர் மாடசாமி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்பட்டவர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டரின் இடமாற்றத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுவர். அவர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர். எனவே, இன்ஸ்பெக்டர் மாடசாமியை தொடர்ந்து சிறப்புப்படையில் பணியாற்ற அனுமதித்து வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 21–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக