செவ்வாய், ஏப்ரல் 01, 2014

முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்: ரயில்வே ஊழியர்அனுப்பியது அம்பலம்

சொத்து பிரச்சினையில் உறவினர்களை பழி வாங்க தமிழக முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய ரயில்வே ஊழியரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் திருத்தணி கோ.ஹரியை ஆதரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 8-ம் தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பகுதியில் பிரம்மாண்ட பொதுக் கூட்ட மைதானம் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.


இதற்கிடையில், அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன் அலு வலகத்துக்கு சனிக்கிழமை கடிதம் ஒன்று வந்துள்ளது. அதனை போலீஸார் படித்துப் பார்த்துள்ளனர். அதில், “அரக்கோணம் ஜோதி நகரில் வசிக்கும் சீதாபதி, சீதாராமன், வெங்கடேசன் ஆகியோர் தமிழக முதல்வரை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளனர். ஏப்ரல் 8-ம் தேதி பிரசாரத்துக்கு வரும் ஜெயலலிதாவை வெடிகுண்டு வீசி கொலை செய்ய உள்ளனர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, உறவினர்கள் தங்கள் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்கலாம் என தெரிவித்தனர். இதையடுத்து மேல்மருவத்தூர் கங்காதரன் என்பவரை விசாரித்தபோது அவர், மிரட்டல் கடிதம் எழுதியதாக ஒப்புக் கொண்டுள்ளார். பெரம்பூர் ரயில்வேயில் வேலை செய்யும் கங்காதரன் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

உறவினர்களுடன் சொத்து தகராறு இருப்ப தால் அவர்களை சிக்க வைப்பதற்காக உறவினர் கள் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பியதாக தெரிவித்துள்ளார். கங்காதரனுக்கு அம்மை நோய் தாக்கியிருப்பதால் அவரை கைது செய்வது குறித்து போலீஸார் ஆலோசனை நடத்திவருகின்றனர். கடந்த டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என அரக்கோணம் ரயில் நிலைய மேலாளருக்கு மிரட்டல் கடிதம் வந்தது. இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த திலகவதி என்பவர் மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரியவந்தது. அதன்பேரில், திலகவதியை போலீஸார் கைது செய்தனர். அவரது தம்பிதான் கங்காதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக