ராமர்கோயிலை கட்டுவதும், ஹிந்துத்துவமும் வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்திருப்பதாக அவ்வமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைஸர் தெரிவித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், மின்சாரம், சாலை, சுகாதாரம் ஆகிய வளர்ச்சி காரியங்களுக்கே மக்கள் முன்னுரை அளித்துள்ளனர்.
இரண்டு மாதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 380 மக்களவை தொகுதிகளைச் சார்ந்த ஒருலட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஆர்கனைசர் வெளியிட்டுள்ளது. ஜனவரி முதல் வாரம் முதல் மார்ச் முதல் வாரம் வரை லோக் சாரதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக கருத்துக்கணிப்பை நடத்தியது. கருத்துக்கணிப்பில் பங்கேற்ற இளைஞர்கள் நல்ல வேலை வாய்ப்பு, சுகாதார பரிபாலனம், மின்சாரம், சாலைகள், குடிநீர், பசியில் இருந்து விடுதலை ஆகிய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய அஜண்டாவான ராமர்கோயிலை கட்டுவது, ஹிந்துத்துவா கொள்கை ஆகியவற்றை இளைய சமூகம் நிராகரித்துள்ளது. தொன்னூறுகளின் துவக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸும், சங்க்பரிவாரமும் எழுப்பிய ராமர்கோயில் விவகாரம்தான் பா.ஜ.கவை மத்தியில் ஆட்சியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது.
நாட்டை ஐந்து பகுதிகளாக பிரித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. வடக்கு இந்தியாவில் மொத்தம் 162 தொகுதிகள் உள்ளன. இங்கு 48.6 சதவீதம் பேர் நரேந்திரமோடி பிரதமராக ஆதரிக்கின்றனராம். இங்கு 27 சதவீதம் பேர் ராகுல் பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளனர். 6.4 சதவீதம் பேர் முலாயம்சிங் பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளனர். 2009-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.கவுக்கு இங்கு 34 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. தென்னிந்தியாவில் 35.8 சதவீதம்பேர் ராகுல்காந்தி பிரதமராக ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், மோடிக்கு இங்கு 33.3 சதவீத ஆதரவு மட்டுமே உள்ளது. தென்னிந்தியாவில் பா.ஜ.கவுக்கு ஆதாயம் இல்லை என்று அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது. ஒருசில வெற்றிகளே பா.ஜ.கவுக்கு கிடைக்கும்.
மத்திய இந்திய மாநிலங்களான மத்திய பிரதேசம், சட்டீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போதிய இடங்கள் கிடைக்கும் என்று பா.ஜ.க நம்புகிறது. இங்கு 45.4 சதவீதம் பேர் மோடி பிரதமராகவும், 29 சதவீதம் பேர் ராகுல் பிரதமராகவும் ஆதரவு தெரிவித்துள்ளனராம். மேற்கு இந்திய மாநிலங்களில் அதாவது மஹராஷ்ட்ரா, குஜராத் ஆகியவற்றில் பா.ஜ.கவுக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும் என்று பா.ஜ.க நம்புகிறது.
டெல்லியில் ஆர்கனைசர் ஏற்பாடுச் செய்த பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆற்றிய உரையில், கொள்கைகளை காலத்திற்கு உகந்தவாறு மாற்றவேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் ஒரு பகுதியாகவே ராமர்கோயில் மற்றும் ஹிந்துத்துவம் ஆகியவற்ற அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க ஒத்திவைக்கும் என கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக