சனி, மார்ச் 08, 2014

ஆசிய சாம்பியன் : பைனலில் இலங்கை, பாக்., மோதல்

ஆசிய கோப்பை பைனலில் இன்று இலங்கை அணி ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தானை சந்திக்கிறது. வங்கதேசத்தில் ஐந்து நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள், லீக் போட்டியுடன் திரும்பின. இன்று நடக்கும் பைனலில், ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான் அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.


இலங்கை அணியை பொறுத்தவரையில் இத்தொடரில் 1986, 1997, 2004, 2008 என, 4 முறை சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. இம்முறை பங்கேற்ற நான்கு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. சீனியர் வீரர் சங்ககரா, 67, 103, 76, 2 என, மொத்தம் 248 ரன்கள் எடுத்து, வலுவான ‘பார்மில்’ உள்ளார்.
குசல் பெரேரா, திரிமான்னே ஏமாற்றிய போதும், கேப்டன் மாத்யூஸ், பின் வரிசையில் கைகொடுக்கிறார். ஜெயவர்தனா பைனலில் மீண்டு வருவார் எனத் தெரிகிறது.


பவுலிங்கில் ‘யார்க்கர்’ மலிங்கா, லக்மல், ‘ஆல்–ரவுண்டர்’ திசரா பெரேராவுடன் சுழல் ஜாலம் காட்ட அஜந்த மெண்டிஸ் உள்ளது கூடுதல் பலம்.

ஆசிய கோப்பை தொடரில் கடந்த 2000, 2012ல் பாகிஸ்தான் அணி சாம்பியன் ஆனது. ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கும் இந்த அணியின் அனுபவ பவுலர் உமர் குல், ஷார்ஜீல் கான், துவக்க வீரர் அகமது ஷேசாத் காயத்தால் அவதிப்படுகின்றனர். கேப்டன் மிஸ்பா உல் ஹக், கடைசியாக பங்கேற்ற மூன்று போட்டியில் 0, 1, 4 என, ஒற்றை இலக்க ரன்கள் தான் எடுத்தார். 

அதேநேரம், இந்தியா, வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிக்சர் மழை பொழிந்து, அணியை பைனலுக்கு கொண்டு வந்த அப்ரிதி மீது, அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர, முகமது தல்ஹா, முகமது ஹபீஸ், சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், உமர் அக்மல் உள்ளிட்டோர் அசத்துவர் என நம்பலாம்.
யாருக்கு கோப்பை:
லீக் போட்டியில் இலங்கையிடம் தோற்றது, கோப்பை தக்க வைக்க வேண்டியது என, பல நெருக்கடியில் பாகிஸ்தான் இன்று களமிறங்குகிறது.
மறுபுறம் கடந்த ஜனவரியில் இருந்து வங்கதேசத்தில் உள்ள இலங்கை அணி, தொடர்ச்சியாக 7 ஒருநாள் போட்டிகளில் வென்ற உற்சாகத்தில் உள்ளது.
இதனால், இன்றைய பைனலில் சாதித்து, இலங்கை அணி ஐந்தாவது முறையாக கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதிக்கம் செலுத்துவது யார்
இரு அணிகள் இதுவரை 138 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 80, இலங்கை 53 ல் வென்றன. ஒரு போட்டி ‘டை’ ஆனது. 4 ஆட்டங்களுக்கு முடிவில்லை.
* ஆசிய கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை, 13 போட்டியில் மோதியுள்ளன. இதில் இலங்கை 9 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. பாகிஸ்தான் அணி 4ல் வென்றுள்ளது.
* ஒட்டுமொத்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்ற 39 போட்டிகளில், 24 வெற்றி, 14 ல் தோல்வியடைந்தது. ஒரு போட்டிக்கு முடிவில்லை. இதேபோல, இலங்கை இத்தொடரில் 33ல் வெற்றி (47 போட்டி), 14ல் தோல்வி பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக