ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்தது. அஸ்கர் 103 பந்தில் 90 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), சமியுல்லா 69 பந்தில் 81 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அரபாத் சன்னி 2 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் விளையாடிய வங்காளதேச அணி 47.5 ஓவரில் 222 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 32 ரன்னில் வெற்றி பெற்றது. மொமினுல் ஹக் 50 ரன்னும், ஜியாவூர் ரகுமான் 22 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். முகமது 3 விக்கெட்டும், ஷபூர், ஹமீத் ஹசன் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற அணிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதனால் அந்த அணிக்கு இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும்.
இந்த வெற்றி குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது கூறிய தாவது:–
இந்த வெற்றி எங்களுக்கு வரலாற்று சிறப்புமிக்கதாகும். ஐ.சி.சி.யின் குழு உறுப்பினராக உள்ள அணிகளில் ஒன்றை முதல்முறையாக வீழ்த்தி இருக்கிறோம். ரசிகர்களும், நாட்டு மக்களும் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். எங்கள் ரசிகர்கள் எப்போதுமே எங்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள். எங்களை நேசிக்கும் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
25 ஓவர் வரை வங்காள தேசம் பந்து வீச்சு நன்றாக இருந்தது. அப்போது அஸ்கர்– சமியுல்லா ஜோடி சிறப்பாக விளையாடியது. கடைசி 10 ஓவரில் 107 ரன்கள் குவித்தது முக்கியமானதாகும். இதேபோல பந்து வீச்சு பீல்டிங்கும் நன்றாக இருந்தது. வீரர்கள் கூட்டு முயற்சியால் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வி குறித்து வங்காள தேச கேப்டன் முஷ்பிகுர் ரகீம் கூறியதாவது:–
ஆப்கானிஸ்தானிடம் தோற்றது மிகவும் அவமானமாகும். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய 3 முறைகளிலும் நாங்கள் செயல் இழந்து விட்டோம். எங்களது பந்து வீச்சு முதல் 30 ஓவர் வரை சிறப்பாக இருந்தது. அதன் பிறகுதான் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
254 ரன் என்பது எடுக்கக்கூடிய இலக்குதான். கடைசி வரை வெற்றிக்காக போராடினோம். சீனியர் வீரர்களான சகீப்–அல்– ஹசன், தமிம் இக்பால் இல்லாதது எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இனிவரும் ஆட்டங்களில் முன்னேற்றம் அடைய விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி அடுத்த ஆட்டத்தில் இலங்கையை நாளை எதிர்கொள்கிறது. வங்காளதேச அணி 4–ந் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக