சனி, மார்ச் 15, 2014

மலேசிய விமானத்தை கடத்தியிருக்கலாம்


239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச்.370 விமானம் கடந்த வாரம் மலேசியா- வியட்நாம் பகுதியில் காணாமல் போனது. இவ்விமானம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வரவில்லை.


விமானம் தொடர்பாக பல்வேறு யூக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் கோலாலம்பூரில் இன்று மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை இப்பணியில் 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. எங்களது நாட்டின் வேண்டுகோளை ஏற்று விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விமானம் கப்பல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த தென் சீன கடல் பகுதியில் முதலில் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் பலன் கிடைக்காததால், அந்தமான் வரை தேடுதல் பரப்பை விரிவுபடுத்தியுள்ளோம்.

ராணுவ ராடார் மற்றும் செயற்கைக்கோள் ஆதாரத்தை வைத்து பார்க்கும்போது, விமானத்தில் இருந்த யாரோ ஒருவர் தகவல் தொடர்பு சாதனங்களை செயலிழக்க செய்துள்ளார். மலேசியா- வியட்நாம் எல்லை அருகில் பறந்தபோது விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

விமானம் வடமேற்கில் திரும்புவதற்கு முன்னதாக, மலேசியாவுக்கு திரும்பியுள்ளது. ராடார் தொடர்பை இழந்தபிறகும் சுமார் 7 மணி நேரம் செயற்கைகோளால் விமானத்தில் இருந்து சிக்னலை பெற முடிந்தது. இருப்பினும், விமானம் சென்ற துல்லியமான இடத்தை அதனால் வழங்க முடியவில்லை. இதனை அடிப்படையாக வைத்து, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று செய்தி வெளியாகி உள்ளது.

அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களை மையமாக வைத்து புதிய கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏதும் ஏற்படவில்லை. இடைவிடாமல் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் மீது அக்கறையும் அன்பும் வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக