வியாழன், மார்ச் 20, 2014

20 ஓவர் உலக கோப்பை பயிற்சி கிரிக்கெட்:கோலி, ரெய்னா ரன் மழை

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது.

பயிற்சி ஆட்டம்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக வங்காளதேசத்திற்கு சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய அணி நேற்று தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை மிர்புர் ஸ்டேடியத்தில் சந்தித்தது. டாஸ் வென்ற இங்கிலாந்தின் தற்காலிக கேப்டன் மோர்கன் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் இந்த முறையும் சொதப்பி வெறுப்பேற்றினர். ரோகித் ஷர்மா 5 ரன்னிலும் (8 பந்து), ஷிகர் தவான் 14 ரன்னிலும் (15 பந்து), யுவராஜ்சிங் 1 ரன்னிலும் (5 பந்து) ஆட்டம் இழந்தனர். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 39 ரன்களாக (6 ஓவர்) இருந்தது.

கோலி, ரெய்னா அரைசதம்
பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ஸ்கோரையும் துரிதமாக உயர்த்தினர். ரவி போபராவின் ஒரே ஓவரில் 4, 4, 6, 4 என்று வரிசையாக எல்லைக்கோட்டிற்கு பந்தை ஓடவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரெய்னா அதே ஓவரில் கேட்ச் ஆகி போனார். ரெய்னா தன் பங்குக்கு 54 ரன்கள் (31 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.
அடுத்து கேப்டன் டோனி களம் புகுந்தார். டோனியும், கோலியும் முடிந்தவரை வேகம் காட்டினர். கடைசி ஓவரில் 3 பவுண்டரியுடன் கோலி இன்னிங்சை முடித்து வைத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது. முதல் 10 ஓவர்களில் 73 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா, அடுத்த 10 ஓவர்களில் 105 ரன்கள் சேகரித்தது குறிப்பிடத்தக்கது. கோலி 74 ரன்களுடனும் (48 பந்து, 8 பவுண்டரி), டோனி 21 ரன்களுடனும் (14 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
இந்தியா வெற்றி
அடுத்து 179 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்துக்கு அலெக்ஸ் ஹாலசும் (16 ரன்), மைக்கேல் லம்பும் (36 ரன், 25 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஓரளவு நல்ல தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர். ஆனால் அஸ்வின், சுரேஷ் ரெய்னா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் ரன்வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்தினர். இதனால் கைவசம் விக்கெட்டுகள் இருந்தும் இங்கிலாந்தால் இலக்கை நெருங்க முடியவில்லை.
கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட போது, 20-வது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்ததுடன் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து இங்கிலாந்தை அடக்கினார். அந்த அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்னே எடுக்க முடிந்தது. இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது.
இந்திய அணி அடுத்து பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை சந்திக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக