கிணத்துக்கடவு வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட்ட 1¼ டன் வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
வாகன சோதனை
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக-கேரள எல்லையில் போலீசார், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் இருந்து சிங்கையன்புதூர் வழியாக கேரளா செல்லும் சாலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
1¼ டன் வெடிமருந்து பறிமுதல்
அப்போது அந்த வழியாக கேரளா நோக்கி சென்ற ஒரு லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். லாரியில் உர மூடைகள் இருப்பதாக டிரைவர் தெரிவித்தார். ஆனால் உர மூடைகளை கொண்டு செல்வதற்கான எந்தவித ஆவணமும் லாரியில் இல்லை. இதைதொடர்ந்து போலீசார் லாரியை கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
அங்கு லாரியில் சோதனை செய்தனர். அப்போது லாரியில் வெடிமருந்து(அம்மோனியம் நைட்ரேட்) 50 கிலோ வீதம் 25 மூடைகளில் இருந்தது. மொத்தம் 1¼ டன் வெடிமருந்து இருப்பது கண்டுபிடிக் கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
டிரைவர் கைது
லாரி டிரைவர் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த சுனில் என்கிற சுனீஷ்(வயது 38) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம் லாரி டிரைவர் சுனில் கூறும்போது, ‘கேரளாவை சேர்ந்த விஜயன், நவீன் ஆகிய 2 பேர் சிங்கையன்புதூர் பகுதிக்கு லாரியை கொண்டு வரும்படி கூறினார்கள். இதன்படி நான் சிங்கையன்புதூருக்கு லாரியில் வந்தேன். அங்கு வந்த ஒரு வாகனத்தில் இருந்த வெடிமருந்து மூடைகளை லாரியில் ஏற்றினார்கள். அதனை பாலக்காடு கொண்டு செல்லும்படி கூறினார்கள். இதன்படி பாலக்காடு செல்ல முயன்றேன். போலீசார் சோதனையில் நான் சிக்கிக் கொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
2 பேருக்கு வலைவீச்சு
இதற்கிடையில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தன்ராஜ் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு வந்து லாரி டிரைவர் சுனிலிடம் விசாரணை நடத்தினார். மேலும் வெடிமருந்து மூடைகளை லாரியில் ஏற்றி விட்டு சென்ற விஜயன், நவீன் ஆகியோரை தேடி போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
இதுகுறித்து ‘கியூ பிராஞ்ச்’ போலீசார் கூறும்போது, தற்போது தமிழ்நாட்டில் ‘அம்மோனியா நைட்ரேட்’ வெடிமருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிமருந்தை குஜராத்தில் இருந்து தமிழ்நாடு வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்’ என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக