புதன், ஏப்ரல் 09, 2014

கேரளாவில் பிரசாரம் ஓய்ந்தது நாளை வாக்குப்பதிவு

கேரளாவில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நாளை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கேரளாவில் பாதுகாப்பு பணிகளுக்காக 51,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கேரளாவில் மொத்தமுள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. 

இதையொட்டி கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 22ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 269 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி மற்றும் பாரதிய ஜனதா ஆகியவற்றுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.அனைத்து தொகுதிகளிலும் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இம்முறை அதைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என காங்கிரஸ் கூட்டணி நம்புகிறது.

சமீபத்தில் கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எழுந்த சோலார் பேனல் மோசடி உட்பட பல்வேறு ஊழல் புகார்களால் தங்களுக்கு கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகள் கிடைக்கும் என கம்யூனிஸ்ட் கூட்டணி எதிர்பார்க்கிறது. இந்நிலையில் கடந்த 1 மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. கடந்த சில தினங்களாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி மார்க்சிஸ்ட் அகில இந்திய பொது செயலாளர் பிரகாஷ் காரத் உட்பட தேசிய தலைவர்கள் கேரளாவை முற்றுகையிட்டு பிரசாரம் நடத்தினர்.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு கேரளா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 51,000 மத்திய, மாநில போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 55 கம்பெனி மத்திய போலீசார் கண்ணூர், கோழிக்கோடு உட்பட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக