கிரெடிட் கார்டுகள் போன்றவை தொலைந்துபோனால் பாதுகாப்பாக உடனே அவற்றை அழித்துவிட உதவக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் பணியாற்றி வருகின்றார். ஐயோவா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருட்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் ரேசா மோன்டசமி என்ற விஞ்ஞானி மக்கும் பொருட்கள் மற்றும் மின்னணுவியலைத் தொடர்புபடுத்தி இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
'நிலையற்ற பொருட்கள்' அல்லது 'நிலையற்ற மின்னணுவியல்' என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிக் குறிப்பிடும் அவர் இதற்கான மூலப்பொருளாக சிறப்பு பாலிமர்களை வடிவமைக்கும் ஆய்வில் செயல்பட்டு வருகின்றார். இத்தகைய பாலிமரில் உருவாக்கப்படும் கார்டுகள் வெளியிலிருந்து தூண்டப்படும்போது எளிதிலும், விரைவாகவும் அழிந்துவிடக் கூடிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் என்று இந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
புதிய துறையாகக் கருதப்படும் இந்த ஆய்வில் முன்னேற்றம் கண்டுவருவதாக மோன்டசமி குறிப்பிட்டுள்ளார். அவர் தலைமையின் கீழ் செயல்பட்டுவரும் விஞ்ஞானிகள் குழு மின்னணுப் பொருட்களுக்கு பொருத்தமான தளங்களாகக் கருதப்படும் மக்கும் தன்மை கொண்ட பாலிமர் கூட்டுப் பொருட்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தரவு பரிமாற்றத் திறன் கொண்ட ஒரு ஆன்டெனாவையும் இவர்கள் சோதனை முயற்சியாக செய்து பரிசோதித்துப் பார்த்துள்ளனர். நிலையற்ற பொருட்களைக் கொண்டு மின்னணு உதவியுடன செயல்படுத்தப்பட உள்ள இந்தப் புதிய தொழில்நுட்பம் ராணுவம் மற்றும் மருத்துவத்துறைகளில் மிகுந்த பயன்பாட்டினை அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று இந்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக