பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல் அமைதியாக நடந்தது. திரிபுராவில் 84 சதவீதமும், அசாமில் 72.5 சதவீத ஓட்டுக்களும் பதிவானது.
6 தொகுதிகள்
இந்திய பாராளுமன்ற தேர்தல் 9 கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் திரிபுராவில் உள்ள 6 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.அதன்படி அசாமின் தேஜ்பூர், காலியாபார், ஜோரத், திப்ருகார், லக்கிம்பூர் ஆகிய 5 தொகுதிகள் மற்றும் திரிபுரா மாநிலத்தின், திரிபுரா மேற்கு தொகுதி என 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
6 மணிக்கே வந்தனர்
அசாம் மாநிலத்தில் 8 ஆயிரத்து 588 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.இங்கு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக காலை 6 மணி முதலே பெண்களும், புதிய வாக்காளர்களும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். பின்னர் வாக்குப்பதிவு தொடங் கியதும், அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது..
வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது
இதற்கிடையே பல்வேறு வாக்குச்சாவடிகளில் சுமார் 40 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகின. இவற்றில் 29 எந்திரங்கள் உடனே மாற்றப்பட்டதுடன், மற்றவை என்ஜினீயர்கள் மூலம் சரி செய்யப்பட்டன.அசாமில் பெரும்பாலும் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆங்காங்கே நடந்த சிறு சிறு மோதல் சம்பவங்களை தவிர குறிப்பிடும்படியான அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இங்கு நடைபெறவில்லை.
அசாமில் 72.5 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இங்கு இரண்டாவது கட்டமாக 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வரும் 12–ந் தேதியும், மூன்றாவது கட்டமாக 6 தொகுதிகளுக்கு 24–ந் தேதியும் தேர்தல் நடக்கிறது.
திரிபுரா மேற்கு தொகுதி
திரிபுரா மேற்கு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சங்கர் பிரசாத் தத்தா, காங்கிரஸ் சார்பில் பேராசிரியர் அருணோதய சஹா, பாரதீய ஜனதா சார்பில் சுதீந்திர சந்திரதாஸ் குப்தா உள்பட 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இங்கு 12 லட்சத்து 46 ஆயிரத்து 794 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 1,605 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
நீண்ட வரிசையில்...
இங்கும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பழங்குடியின பெண்கள் பலர் தங்கள் பாரம்பரிய உடையில் வந்து வாக்களித்ததை காண முடிந்தது.பிற்பகல் 3 மணி நிலவரப்படி இங்கு 74 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஓட்டுப்பதிவு முடிந்த போது இங்கு 84 சதவீத ஓட்டுகள் பதிவாதி இருந்தது. இங்கும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இங்கும் சுமார் 10 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரக்கோளாறு காரணமாக சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. இவற்றில் சில எந்திரங்கள் மாற்றப்பட்டும், சில எந்திரங்கள் சரி செய்தும் வழங்கப்பட்டன.திரிபுரா முதல்–மந்திரி மாணிக் சர்க்கார், பா.ஜனதா வேட்பாளர் சுதீந்திர சந்திரதாஸ் குப்தா மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அருணோதரய சஹா ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
இங்கு மீதமுள்ள இன்னொரு தொகுதிக்கு 12–ந் தேதி தேர்தல் நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக