திங்கள், ஏப்ரல் 07, 2014

அசாம் தேர்தலில் 35 சதவீதம் வாக்குப்பதிவு

16–வது பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு 9 கட்டமாக நடத்தப்படுகிறது. 81.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

அசாம் மாநிலத்தில் தேஸ்பூர், காலியாபூர், ஜோர்காட், திப்ருகார், லட்சுமிபூர் ஆகிய 5 தொகுதிகளிலும், திரிபுராவில் உள்ள 2 பாராளுமன்ற தொகுதிகளில் ஒன்றான திரிபுரா மேற்கு தொகுதியிலும் முதல்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கண்ட தொகுதிகளில் வழக்கமான ஓட்டுப்பதிவு நேரத்தைவிட கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு நடைபெறும் 6 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அசாமில் காங்கிரஸ், பா.ஜனதா, திரிணாமூல் காங்கிரஸ், அசாம் கனபரிஷத், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, அகில இந்திய பார்வர்டு பிளாக் என பல கட்சிகள் தனித்தனியாக நிற்பதால் பலமுனை போட்டி நிலவுகிறது. 5 தொகுதிகளில் மொத்தம் 51 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

அசாமில் அமைக்கப்பட்டுள்ள 8,588 வாக்குச்சாவடிகளில் 31,20,067 பெண்கள் உள்பட 64,41,634, வாக்காளர்கள் இன்று தங்களது வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர். இவர்களில் சுமார் 6 1/2 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள் ஆவர்.

வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்தே ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். நண்பகல் 12 மணி நிலவரப்படி மேற்கண்ட வாக்குச்சாவடிகளில் சராசரியாக 35 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

நண்பகல் 12 மணிவரை 64 லட்சத்து 41 ஆயிரத்து 634 பேர் வாக்களித்துள்ளதாகவும், தேஜ்பூரில் 27 சதவீதம், ஜோர்ஹட்டில் 45 சதவீதம், லக்கிம்பூரில் 32 சதவீதம், திப்ருகரில் 38 சதவீதம், கொய்லாபரில் 30 சதவீதம் என சராசரியாக 35 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் மாநில தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக