ஞாயிறு, மார்ச் 16, 2014

பணம் பறிமுதல் செய்யும் நடவடிக்கை : கொந்தளிக்கும் வியாபாரிகள்

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் கோவை மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் முத்துராஜ், மாவட்ட பொருளாளர் பொன்.தங்க மாரியப்பன், மாநில துணைத்தலைவர் வடிவேல், மாநில துணை பொதுச்செயலாளர் அபிபுல்லா, வடக்கு மாவட்ட செயலாளர் லாரன்ஸ் துரை ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
பாராளுமன்ற தேர்தலை யொட்டி பறக்கும் படையினர், போலீசார் ஆங்காங்கே சோதனை செய்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த அரசியல்வாதிகளிடம் இருந்து எந்த பணத்தையும் பறக்கும் படையினர் பிடித்ததாக தெரியவில்லை.

பறக்கும் படையினரும் காவல் துறையினரும் சோதனை என்ற பெயரில் பொது மக்களையும், வியாபாரிகளையும் கொள்முதல் செய்யப்போகும்போது தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருக்கும் பணத்தை கையகப்படுத்திக் கொள்கிறார்கள்.
வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து பம்பு செட் மற்றும் உதிரி பாகங்கள் வாங்க வருபவர்களும் திருமணத்திற்காக தங்க நகைகள், ஜவுளி, மளிகை பொருட்கள் வாங்க வரும் பொது மக்களும், கடைக் காரர்களும் பணத்தை கொண்டு வருகிறார்கள். இன்று இருக்கும் விலைவாசி உயர்வு காரணத்தால் லட்சக்கணக்கில் பணத்தை கொண்டு சென்றுதான் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
அதுமட்டுமல்ல விவசாயிகள் சந்தைகளுக்கு சென்று பொருட்கள் விற்கவும், வேறு பொருட்கள் வாங்குவதற்கும் பணத்தை கொண்டு செல்கிறார்கள். இதற்கு எல்லாம் எந்த ஆவணம் கொடுப்பது? ஆனால் காவல் துறையும் பறக்கும் படையினரையும் இதற்கெல்லாம் ஆவணங்கள் கேட்கிறார்கள்.
சிறு கடைக்காரர்கள் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறைதான் மொத்த வியாபாரிகளிடம் சென்று கொள்முதல் செய்கிறார்கள். அவர்களிடம் பணம் எப்படி வந்தது என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?
அதிக பணம் கொண்டு செல்லும் அரசியல்வாதிகளையும், அது சம்பந்தப்பட்டவர் களையும் பிடிக்க வேண்டும். வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகளிடம் பணத்தை பறித்து துன்புறுத்த வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறோம்.
இது போன்று காவல் துறையும், பறக்கும் படையினரும் வியாபாரிகளிடம் பணம் பறிமுதல் செய்யும் நிலை ஏற்பட்டால் வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு கோவை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்றும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக