வியாழன், மார்ச் 06, 2014

உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவிற்கு எதிராக 'லைவ்' ஆக வேலையை உதறிய செய்தியாளர்!....

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா டுடே தொலைக்காட்சி செய்தியாளர் தனது வேலையை ராஜினாமா செய்வதாக நேரடி ஒளிபரப்பில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். உக்ரைனின் க்ரைமியா பகுதியில் ரஷ்ய படைகள் புகுந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்ற புதினின் அறிவிப்பு பதற்றத்தை சற்று தணித்துள்ளது.
உக்ரைனில் இருந்து வெளியேறி ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள அந்நாட்டு அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் உக்ரைனில் புதிதாக அமைந்துள்ள அரசுக்கு ஆதரவாக ராணுவ கண்காணிப்பு குழுவை அனுப்ப ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது. உக்ரைனில் அமைந்துள்ள புதிய அரசுக்கு நிர்வாக ஒத்துழைப்பு அளிப்பதே இக்குழுவின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அமைச்சர்கள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார விவகாரம் மற்றும் விசா விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து புதின் உக்ரைனில் ரஷ்ய படைகள் தேவையில்லை என்று அறிவித்தார். ரஷ்யாவின் ராணுவப் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா டுடே தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், நேரடி ஒளிபரப்பின் போதே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ரஷ்ய நிதி உதவியால் இயங்கப்படும் இந்த தொலைக்காட்சியில் இனிமேலும் என்னால் தொடர்ந்து பணிபுரிய முடியாது. ரஷ்யாவின் க்ரைமியா மீதான ராணுவ ஆதிக்கத்தை நியாயப்படுத்தி இத்தொலைக்காட்சி தொடர்ந்து செயல்படுவதால் நான் உண்மையை தெரிவிக்கவே விரும்புகிறேன். அதனால் தான் இந்தத் தொலைக்காட்சியிலிருந்து, இச்செய்தி வாசிக்கப்பட்டு முடிந்ததும் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்' என அவர் செய்தி வாசிப்பின் போது அறிவித்தார். ரஷ்யா டுடே தொலைக்காட்சி செய்திகள் 100 நாடுகளில் ஒளிபரப்பாகிறது. நேரடி ஒளிபரப்பு ஒன்றில் செய்தி வாசிப்பாளர் தனது ராஜினாமாவை அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக