வியாழன், மார்ச் 20, 2014

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் சென்னையில் நடந்தது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் சென்னையில் நேற்று நடந்தது.

ஆம் ஆத்மி கட்சி
ஆம் ஆத்மி கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.அதில் மத்திய சென்னை – ஜெ.பிரபாகர், கோவை – பொன்.சந்திரன், ஈரோடு – கே.கே.குமாரசாமி, சேலம் – சதீஷ்குமார், கன்னியாகுமரி – எஸ்.பி.உதயகுமார், தூத்துக்குடி – எம்.புஷ்பராயன், திருநெல்வேலி – மை.பா.ஜேசுராஜ், திருப்பூர் – ஆர்.சக்கரவர்த்தி ராஜகோபாலகிருஷ்ணன், புதுச்சேரி – டாக்டர் ரங்கராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.நேற்று சென்னை பெருங்குடியில் உள்ள தமிழக ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிடத்தில், இந்த வேட்பாளர்கள் பத்திரிகையாளர்கள் முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டனர். அப்போது தமிழக ஆம் ஆத்மி கட்சியின் பிரசார குழு ஒருங்கிணைப்பாளர் டேவிட் பரூண்குமார், நிர்வாகிகள் ஆனந்து, பாண்டியன் மற்றும் ராம் சுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி மாநில பிரசார குழு ஒருங்கிணைப்பாளர் டேவிட் பரூண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
அடுத்த பட்டியல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்த 25 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது தயார்படுத்தப்பட்டு உள்ளது. அதன் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து 2–வது வேட்பாளர் பட்டியல் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் வெளியிடப்படும். மேலும் 3–வது வேட்பாளர் பட்டியல் அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படுகிறது.
தேர்தல் அறிக்கையை பொறுத்தமட்டில் 3 விதமான அறிக்கை வெளியிடப்படும். அதில் டெல்லியில் தேசிய அளவிலான தேர்தல் அறிக்கையும், சென்னையில் மாநிலங்கள் அளவிலான ஒரு அறிக்கையும் தயார் செய்யப்படும். அதே போல், வேட்பாளர்கள் போட்டியிடும் அந்தந்த தொகுதிகளுக்கு ஏற்றவாறு ஒரு அறிக்கையும் தயார் செய்யப்படும். தேர்தல் பிரசாரத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் வருகையை எதிர்நோக்கி நாங்கள் காத்திருக்கிறோம். ஊழலற்ற இந்தியாவை மாற்றியமைப்பதே எங்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதையடுத்து, முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 9 பேரில் 6 பேர் நேரடியாக தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் தங்களை அறிமுகப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக