புதன், மார்ச் 19, 2014

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அபாரவெற்றி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானிடமும் தோல்வி அடைந்த ஹாங்காங் அணி போட்டியை விட்டு வெளியேறியது.

உலக கோப்பை கிரிக்கெட்
5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 8 அணிகள் நேரடியாக ‘சூப்பர்–10’ சுற்றில் (மார்ச் 21–ந் தேதி முதல்) விளையாட உள்ளன. எஞ்சிய இரு இடத்திற்கான தகுதி சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது.


தகுதி சுற்றில் களம் இறங்கியுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இதன்படி ‘ஏ’ பிரிவில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்–10’ சுற்றுக்குள் நுழையும்.

இந்த நிலையில் சிட்டகாங்கில் நேற்று நடந்த ஆட்டத்தில் (ஏ பிரிவு) குட்டி அணிகளான ஹாங்காங்–ஆப்கானிஸ்தான் அணிகள் சந்தித்தன. இதில் டாஸில் ஜெயித்து முதலில் பேட் செய்த ஹாங்காங் அணியில் முதல் பந்திலேயே இர்பான் அகமது கிளீன் போல்டு ஆனார். இதே போன்று தான் முந்தைய ஆட்டத்திலும் இர்பான் அகமது முதல் பந்திலே ஆட்டம் இழந்தார். ஆனாலும் சுதாரித்து கொண்டு சரிவில் இருந்து மீண்டு வந்த ஹாங்காங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்க் சாப்மன் 38 ரன்கள் எடுத்தார்.

ஆப்கானிஸ்தான் வெற்றி
அடுத்து களம் புகுந்த ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் கீப்பர் முகமது ஷாசாத், ஷபியுல்லா ஆகியோரின் அதிரடியால் வெற்றிப்பாதையை எளிதாக்கியது. 24 ரன்னில் இருந்த போது சுலபமான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த முகமது ஷாசாத், டோனி போன்று ‘ஹெலிகாப்டர் ஷாட்’டில் சிக்சர் பறக்க விட்டு வியக்க வைத்தார். அவர் 68 ரன்களில் (53 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். பந்தை பவுண்டரிக்கு விரட்டி இலக்கை எட்ட வைத்த ஷபியுல்லா அரைசதத்தையும் ( 51 ரன்கள், 24 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கடந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் திரட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் தோற்றிருந்த ஆப்கானிஸ்தான் இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
அதே சமயம் ஏற்கனவே நேபாளிடம் மண்டியிட்ட ஹாங்காங் அணி தொடர்ந்து 2–வது தோல்வியை சந்தித்தன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக