திங்கள், ஜூலை 08, 2013

எகிப்தில் ராணுவப் புரட்சி!-ஐரோப்பிய யூனியனின் இரட்டை வேடம்!-எர்துகான் கண்டனம்!

அங்காரா: எகிப்தில் நடக்கும் அசம்பாவித சம்பவங்களில் ஐரோப்பிய யூனியன் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் கண்டனம் தெரிவித்துள்ளார். யூனியனின் அடிப்படை தத்துவங்களை உறுப்பு நாடுகள் மீறியுள்ளன என்று எர்துகான் குற்றம் சாட்டியுள்ளார்.


இஸ்ஹான்புல்லில் விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார் எர்துகான். மேலும் அவர் கூறியது: மேற்கத்திய நாடுகள் ஜனநாயகத்துக்கு ஆதரவாக இருக்கின்றனவா? எல்லா நாடுகளிலும் ஜனநாயகம் மலரவும், அதற்காக பாடுபடவும் செய்கின்றனவா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள் தோல்வியை தழுவியுள்ளன. எகிப்தில் நடந்த சம்பவத்தை ராணுவ புரட்சி என்று கூற தயாராகாத ஐரோப்பிய யூனியன் சொந்த தத்துவங்களையே மீறியுள்ளது. இரட்டை நிலைப்பாட்டை அங்கீகரிக்க முடியாது என்று எர்துகான் தெரிவித்தார்.

கேஸி பார்க் போராட்டத்தை எதிர்கொண்ட துருக்கியின் நடவடிக்கைக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட ஐரோப்பிய நாடுகளின் அறிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்தார் எர்துகான். எகிப்தின் உறுப்பினர் பதவியை ரத்துச் செய்த ஆப்பிரிக்க யூனியனுக்கு எர்துகான் நன்றி தெரிவித்தார். எகிப்தில் நடந்த சம்பவத்தை ராணுவ புரட்சி என்று கூற ஐரோப்பிய யூனியனோ, அமெரிக்காவோ, ஐ.நா அவையோ தயாராகவில்லை. எகிப்தில் விரைவில் ஜனநாயகம் மலரவேண்டும். தேர்தல்களில் அனைத்து பிரிவினரும் பங்கேற்கவேண்டும். எகிப்தில் புரட்சி நடத்தியவர்களும், அதனை ஆதரித்தவர்களும் துருக்கியின் வரலாற்றில் இருந்து பாடம் பெற்றுக்கொள்ளவேண்டும். ஆயுத பலத்தால் ஜனநாயகத்தை நிலை நாட்ட முடியாது. இவ்வாறு எர்துகான் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக