கெய்ரோ: பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸியை மீண்டும் அதிகாரத்தில் கொண்டுவரவும், ராணுவம் தனது அடக்குமுறையை நிறுத்த கோரியும் ராணுவம் தலைமையகம் நோக்கி இஃவானுல் முஸ்லிமீன் நடத்திய பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ராணுவத்தின் தொடர் மிரட்டலையும் மீறி இப்பேரணி நடந்தது.
தங்களுடைய இரத்தத்தையும், உயிரையும் நாட்டிற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் அர்ப்பணித்துள்ளதாக பேரணியில் கலந்துகொண்ட மக்கள் முழக்கம் எழுப்பினர். பேரணியில் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளதால் ராணுவ தலைமையகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராபிஆ அல் அதவிய்யாவில் ஜனநாயகரீதியாக போராடி வரும் மக்கள் மீது சர்வாதிகார ராணுவம் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச்சூட்டில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நகரத்தில் இருந்து துடைத்து நீக்குவோம் என்ற ராணுவத்தின் மிரட்டலையும் மீறி கடந்த இரண்டு தினங்களாக அதிகமான மக்கள் நகரத்திற்கு வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இஃவானுல் முஸ்லிமீன் மீதான தாக்குதல் நடவடிக்கையில் இருந்து ராணுவம் பின்மாறவேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை தலைவர் காதரின் ஆஷ்டன் தெரிவித்துள்ளார்.
ராணுவ அரசின் தலைவர்களை சந்தித்து ஆஷ்டன் இக்கோரிக்கையை விடுத்தார். இஃவானுல் முஸ்லிமீன் தலைவர்களுடன் ஆஷ்டன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. முர்ஸி பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு 2-வது முறையாக ஆஷ்டன் எகிப்திற்கு வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண ஆஷ்டன் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இதுக்குறித்த விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. முர்ஸி பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு எகிப்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதிகமானபேர் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர்.
செய்தி: தேஜஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக