புதன், ஜூலை 17, 2013

கஷ்மீர் இளைஞர் மும்பையில் மர்மமான முறையில் மரணம்!-மக்கள் போராட்டம்!

ஸ்ரீநகர்: கஷ்மீரைச் சார்ந்த இளைஞர் ஒருவர் மும்பையில் மர்மமான முறையில் மரணித்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீநகரில் வன்முறை ஏற்பட்டது. இளைஞரின் மரணம் கொலை என்று கூறி ஊர்மக்களும், போலீசும் மோதலில் ஈடுபட்டனர். மும்பை மருத்துவமனை ஒன்றில் மரணித்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குலாம்தன்போராவைச் சார்ந்த பர்வேஸ் அஹ்மது டெலியின் உடல் நேற்று முன் தினம் மாலையில் ஸ்ரீநகருக்கு கொண்டுவரப்பட்டது.


டெலியை கடத்திச் சென்று கொலைச் செய்த சம்பவத்தின் பின்னணியில் அரசு ஏஜன்சிகளும், வகுப்புவாத சக்திகளுமாகும் என்று தெஹ்ரீக் – இ – ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி குற்றம் சாட்டியுள்ளார். டெலியின் இஸ்லாமிய அடையாளமான தாடியும், மீசையும் தான் அவர் கொலைச் செய்யப்படக்காரணம் என்றும் கிலானி கூறினார். கோபமடைந்த போராட்டக்காரர்கள் ரப்பர் டயர்களை எரித்தனர். ஸரஃப் கவுல், நவ்ஹட்டா ஆகிய போலீஸ் ஸ்டேசன்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் கண்ணீர் குண்டும், லத்திச் சார்ஜும் நடத்தியது. மோதலில் போராட்டத்தில் ஈடுபட்ட எட்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. 

டெலியின் மரணத்தில் மும்பை போலீசுடன் இணைந்து விசாரணை நடத்தப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஆஷிக் புகாரி தெரிவித்துள்ளார். மாநிலத்தில் எதிர்ப்பு வலுப்பெறுவதையொட்டி விசாரணைக்காக ஒரு குழுவை மும்பைக்கு அனுப்புவோம் என்று ஜம்மு-கஷ்மீர் போலீஸ் தெரிவித்துள்ளார்.

எல்மின்ஸ்டன் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் ரெயில்வே ட்ராக்கில் காயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட டெலி, கே.இ.எம் மருத்துவமனையில் இம்மாதம் 9-ஆம் தேதி மரணமடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக