புதன், ஜூலை 24, 2013

மோடிக்கு அமெரிக்க விசா! - 65 எம்.பிக்கள் எதிர்ப்புக் கடிதம்!

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இனப்படுகொலைகளை மேற்கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு அமெரிக்க அரசு உள்நுழைவு அனுமதி (விசா) மறுத்துவருவது அறிந்ததே. தற்சமயம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ராஜ்நாத்சிங்,  நரேந்திரமோடிக்கு அமெரிக்க விசா பெறுவதற்கு மிகவும் முனைப்பு காட்டி வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நியூயார்க் நகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், நரேந்திர மோடிக்கு விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை வற்புறுத்த இருப்பதாக அறிவித்திருந்தார்.
ஆனால், நரேந்திர மோடிக்கு விசா (நுழைவனுமதி) வழங்கக்கூடாது என்று அமெரிக்க அரசை வலியுறுத்தி இந்தியாவை சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இதற்கான  கடிதம் எழுதப்பட்டிருந்தது. அமெரிக்காவில் உள்ள ‘இந்திய முஸ்லிம் கவுன்சிலில் உள்ள அந்தக் கடிதத்தின் நகல், ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், ‘‘குஜராத் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் மோடி அரசில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள். அவர்கள் மீதான வழக்குகள் நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே இந்த சூழ்நிலையில், நரேந்திர மோடிக்கு விசா வழங்கும் தடையை நீக்குவது சரியாக இருக்காது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
12 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்களும், 25 மாநிலங்களவை உறுப்பினர்களும் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக, இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மாநிலங்களவை சுயேச்சை உறுப்பினரான முஹம்மது அதீப் தெரிவித்து இருக்கிறார்.
சீத்தாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), எம்.பி.அச்சுதன் (இந்திய கம்யூனிஸ்டு), ரஷீத் மசூத் (காங்கிரஸ்), எஸ்.அகமது (திரிணாமுல் காங்கிரஸ்), கே.பி.ராமலிங்கம் (தி.மு.க.), எஸ்.எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ்), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோரும் கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர் என்றும் முஹம்மது அதீப் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக