வெள்ளி, ஜூலை 26, 2013

வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளிக்கும் ஆர்.எஸ். எஸ்.! -திக் விஜய் சிங் குற்றச்சாட்டு!

நீமச்: வெடிகுண்டு தயாரிக்க ஆர்.எஸ். எஸ். பயிற்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ள குற்றச்சாட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அவ்வப்போது சமயம் கிடைக்கும்போதெல்லாம் கடுமையாக விமர்சித்து வருபவர் திக்விஜய் சிங். இந்நிலையில் நீமச்சில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், மேற்கூறிய திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார். 

கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலேயே தாம் இதனைக் கூறுவதாக தெரிவித்த அவர், 1992 ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ். சேவா பாரதி அலுவலகத்தில் குண்டுவெடித்து ஒருவர் உயிரிழந்ததாகவும், 1993 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த பின்னர், அந்த வழக்கை மீண்டும் விசாரித்தபோது, கார்கானில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படும் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார் என்றும் கூறினார். 
அதேப்போன்று 2004 ல் மத்தியப்பிரதேசத்தின் மஹாவ் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தங்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்ததாக தெரிவித்தனர். அடிப்படைவாத அமைப்புகளுக்கு பா.ஜனதா எப்போதுமே ஆதரவளித்து வருகிறது என்று திக்விஜய் சிங் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக