தர்மபுரி: ரயில் மோதியதால் தலையில் காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றும், கனமான இரும்பு பொருள் தாக்கியதாலும் இறந்திருக்கலாம் என்றும் இளவரசனின் உடல் மறு பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், செல்லங்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை நத்தம்காலனியை சேர்ந்த இளவரசன் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் தர்மபுரியில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட வன்முறையில் பல வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த நிலையில், திவ்யா காதல் கணவர் இளவரசனை விட்டு பிரிந்தார்.
காதல் மனைவி பிரிந்து சென்ற சில நாட்களில் இளவரசன் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கையில், இளவரசன் தலையில் அடிபட்டதால் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று இளவரசனின் நண்பர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர், இளவரசனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி எய்ம்ஸ் டாக்டர்கள் மறுபிரேத பரிசோதனை செய்தபின்னர், இளவரசனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களின் மறுபிரேத பரிசோதனை அறிக்கை இளவரசனின் தந்தையிடம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "இளவரசனின் தலையில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டதால் மரணம் ஏற்பட்டிருக்கிறது. ரயில் மோதியதால் இந்த காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. கனமான இரும்பு பொருள் தாக்கியதாலும் இறந்திருக்கலாம். அதேசமயம் உடலில் வேறு எந்த காயமும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக