வெள்ளி, ஜூலை 19, 2013

வங்காளதேசம்: ஜமாஅத்தே இஸ்லாமி தலைவருக்கு மரணத்தண்டனை: சர்ச்சைக்குரிய சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பு!

டாக்கா: வங்காளதேசத்தில் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவருக்கு அரசு உருவாக்கிய சர்ச்சைக்குரிய சர்வதேச தீர்ப்பாயம் மரணத் தண்டனை விதித்துள்ளது. ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளரான 65 வயதுடைய அலி அஹ்ஸன் முஹம்மது முஜாஹிதை, கடத்தல், கொலை உள்ளிட்ட ஐந்து வழக்குகளில் குற்றவாளி என்று கூறி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் கிழமை ஜமாஅத்தே இஸ்லாமியின் மிகவும் மூத்த தலைவரான குலாம் ஆஸமிற்கு 90 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான சுதந்திர போராட்டத்தில் அறிவுஜீவிகள் உள்ளிட்டோரை கடத்திச் சென்று கொலைச் செய்ய முஜாஹித் சதித்திட்டம் தீட்டினார் என்பது தீர்ப்பாயத்திற்கு தெரியவந்ததாக வழக்குரைஞர் கூறினார்.
மூத்த பத்திரிகையாளரையும், இசை அமைப்பாளரையும் காணாமல் போன சம்பவத்தில் முஜாஹிதிற்கு பங்கிருப்பதாக அரசு தரப்பு வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டினர். போரின் போது ஜமாஅத்தின் மாணவர் பிரிவு தலைவராக இருந்த முஜாஹித், அல் பத்ர் என்ற ஆயுதக்குழுவுக்கு தலைமை வகித்தார் என்பது அரசு தரப்பின் குற்றச்சாட்டு. இது தவறான தீர்ப்பு என்று முஜாஹித், நீதிமன்றத்தில் உரக்க கூறினார். நீதி கிடைக்கவில்லை, இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடுச் செய்வோம் என்று முஜாஹிதின் வழக்குரைஞர் தெரிவித்தார். எதிர்கட்சி தலைவரான காலிதா ஜியாவின் தலைமையில் 2011-ஆம் ஆண்டு வங்காளதேச ஆட்சி நடைபெற்றபோது முஜாஹித் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
அதேவேளையில், தீர்ப்பாயத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பிற்கு எதிராக வங்காளதேசத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.நேற்று பல இடங்களிலும் போலீசும், பொதுமக்களும் மோதலில் ஈடுபட்டனர். நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும், உள்ளூர் தலைவர்களும் கூட்டாக கைதுச் செய்யப்படுகின்றனர்.

செய்தி:தேஜஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக