வியாழன், ஜூலை 25, 2013

மதிய உணவில் விஷம், புத்தகயா குண்டுவெடிப்பின் பின்னணியில் பா.ஜ.க -ஆர்.ஜே.டி சதி!-முதல்வர் நிதிஷ் குமார் அதிர்ச்சிகர குற்றச்சாட்டு!

பாட்னா: பீகாரில் சத்துணவு சாப்பிட்டு 23 குழந்தைகள் இறந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக மாநில முதல்வர் நிதீஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பீகாரின் சாப்ரா மாவட்டம், சரன் நகரில் கடந்த வாரம் பள்ளிக்கூடத்தில் விஷம் கலந்த சத்துணவு சாப்பிட்டு 23 குழந்தைகள் இறந்தனர். இச்சம்பவத்துக்கு காரணமான யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. தலைமறைவான பள்ளி முதல்வரைக் கைது செய்வதற்கு சாப்ரா நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தொடர்பாக தன் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் நிதீஷ்குமார் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியது: மதிய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்ததை தடயவியல் ஆய்வகம் கண்டறிந்தது. இத்துயரச் சம்பவத்தின் பின்னணியில் சதி நடந்திருக்கலாம் என்ற நமது சந்தேகத்தை தடயவியல் ஆய்வகம் உறுதிப்படுத்தியுள்ளது. புத்த கயையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு, சாப்ரா மதிய உணவு துயரச் சம்பவம் ஆகியவற்றுக்குப் பிறகு பா.ஜ.க. மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளிடையே ஓர் உடன்பாடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த இரு கட்சிகளும் மேற்கண்ட இரு சம்பவங்களையும் தொடர்ந்து ஒரே நாளில் பந்த் போராட்டத்தை நடத்தின. இது இக்கட்சிகளிடையே உள்ள ரகசிய உடன்பாட்டை உறுதிப்படுத்துகிறது. எனது அரசை நிலைகுலையச் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்குமோ என்று நான் அஞ்சுகிறேன். ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணி முறிவுக்குப் பின் பீகாரில் ஆட்சி அதிகாரத்தை இழந்ததால் பா.ஜ.க. அதிருப்தி அடைந்துள்ளது. எனவே அக்கட்சி ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைந்து அரசின் நிலைத்தன்மையைக் குலைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றார் நிதீஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக