புதுடெல்லி: நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று எழுதப்பட்ட கடிதம் தொடர்பாக விசாரிக்குமாறு அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.யிடம் பாஜக கோரிக்க வைக்கலாம் என்று காங்கிரஸ் யோசனை கூறியுள்ளது.
குஜராத்தில் 2002இல் நிகழ்ந்த இந்திய வரலாறு காணாத முஸ்லிம் இனப்படுகொலையைத் தொடர்ந்து, அதனை தலைமையேற்று நடத்திய நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்று அமெரிக்கா முடிவு செய்தது. இந்த முடிவை மாற்ற வேண்டாம் என்று அந்நாட்டு அரசை வலியுறுத்தும் வகையில் சமீபத்தில் எழுதப்பட்ட கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கடிதத்தில் 65 எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால், அந்தக் கடிதத்தில் தாம் கையொப்பம் இடவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட சில எம்.பி.க்கள் பல்டியடித்துள்ளனர். இந்தக் கடிதம் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க., “”அதில் கையொப்பமிட்டவர்கள்தான் பதிலளிக்க வேண்டும். இது காங்கிரஸின் மலிவான அரசியல் தந்திரமாக இருக்கலாம்” என்று குறிப்பிட்டது.
இந்நிலையில், தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அஹமது, டுவிட்டர் இணையத்தில் வெளியிட்ட பதிவில், “”நரேந்திர மோடி தொடர்பான எம்.பி.க்களின் கடிதம் இந்தியாவில் எழுதப்பட்டு, அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டது. பா.ஜ.க.வுக்கு சிபிஐ அமைப்பு மீது நம்பிக்கை இல்லை. எனவே இந்தக் கடித விவகாரம் தொடர்பாக எஃப்.பி.ஐ. அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்துமாறு அக்கட்சி, அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் கோர வேண்டும்” என்று ஆலோசனை கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக