வியாழன், ஜூலை 18, 2013

இந்தியாவையே விற்றுவிட துடிக்கும் ஐ.மு.கூட்டணி அரசு!-மம்தா பானர்ஜி ஆவேசம்!

தொலைத் தொடர்பு துறை, பாதுகாப்பு துறை, இன்சூரன்ஸ் துறை ஆகியவற்றில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இந்தியாவையே விற்றுவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துடிப்பதாக மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். 

நாடியா மாவட்டத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:- 

காங்கிரஸ் கட்சியில் இருப்பதற்காக அவமானப்பட்டுதான் நாங்கள் திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினோம். காங்கிரஸ் காரர்களை பார்ப்பது கூட எனக்கு அவமானமாக உள்ளது. 

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பல காங்கிரஸ் காரர்கள் எங்கள் கட்சி தயவால் தான் மத்திய மந்திரிகளாக இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து எங்கள் கட்சி விலகியது. 

ஆனால், நாட்டின் பாதுகாப்பு, தொலைத் தொடர்பு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட துறைகளிலும் நேரடி அன்னிய முதலீட்டை மத்திய அரசு தற்போது அனுமதித்துள்ளது. இன்னும் எந்தெந்த துறையில் நேரடி முதலீட்டை அனுமதிப்பார்களோ? எவ்வளவு பணம் வந்த பிறகு இதை நிறுத்திக் கொள்வார்களோ? என்பதை நான் அறிந்துக்கொள்ள விரும்புகிறேன். 

இதே போக்கில் சென்று நாட்டையே விற்றுவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி துடிக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக