செவ்வாய், ஜூலை 09, 2013

மீண்டும் சர்வாதிகாரத்தை நோக்கி எகிப்து!

31 ஆண்டுகள் நீண்ட ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை அகற்றிவிட்டு ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக எகிப்தின் அதிபராக பதவியேற்று ஓர் ஆண்டை நிறைவுச் செய்த இஃவானுல் முஸ்லிமீனின் முஹம்மது முர்ஸி ராணுவப் புரட்சி மூலம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முர்ஸியின் தலைமையிலான இஸ்லாமிய ஜனநாயக ஆட்சியை இஸ்ரேலிய யூத லாபிக்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் உதவியோடு அகற்றியவர்கள் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்ததோடு, அரபு வசந்தத்தின் பூக்கள் மலந்த தஹ்ரீர் சதுக்கத்தை அசுத்தமாக்கியுள்ளனர்.
எகிப்தின் முஹம்மது முர்ஸி, துருக்கியின் எர்துகான், ஈரானின் அஹ்மத் நஜாத் ஆகியோர் மத்திய கிழக்கை ஒரு வல்லரசு பிராந்தியமாக மாற்றிவிடுவார்களோ என்ற அச்சம் இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய சக்திகளிடம் குடிக்கொண்டிருந்தது.
இஸ்ரேலின் கொடுமையான தடைகளால் அல்லலுறும் காஸா மக்களுக்கு வாழ்வின் வசந்த காற்றாக அரபு வசந்தம் மாறியிருந்தது. தாங்கள் இது நாள் வரை அனுபவித்து வரும் துயரங்களுக்கு எகிப்தில் உருவான மாற்றம் தீர்வை தரும் என்று ஃபலஸ்தீன் மக்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், ஏகாதிபத்திய, சியோனிஷ சக்திகள் இதுபோன்ற எந்த முன்னேற்றத்தையும் விரும்பாதவர்கள் அல்லவா? அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கண் துடைப்பாக தாங்கள் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என அறிக்கை வெளியிட்டாலும், மறைமுகமாக சதி வேலைகளில் ஈடுபட அவர்கள் தயங்கவில்லை. இவர்களின் சதித்திட்டங்களை நிறைவேற்ற கூலிக்கு மாரடிக்கும் நபர்கள் எகிப்துக்கு உள்ளேயே கிடைப்பதில் எவ்வித சிரமமும் ஏற்படவில்லை.
முபாரக் ஆட்சியில் அதிகாரத்தின் பலத்தால் நாட்டின் வளங்களை உறிஞ்சியவர்கள், மத எதிர்ப்பாளர்கள், கட்டுக்கு அடங்காத ரவுடி கும்பல்கள் எகிப்தில் தாராளம் உண்டு. இதுபோன்ற கயமை உள்ளம் படைத்த கும்பல்களை எந்த சமூகத்திலும் காணமுடியும். இவர்களுக்கு தலைமை வகித்தவர்களோ சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் முன்னால் தலைவர் அல் பராதி, அரபு ஷேக்குகளின் அரண்மனைககளில் இருந்துகொண்டு அரபு ஐக்கியம் குறித்து வாய்க் கிழிய பேசிய முன்னாள் அரபுலீக்கின் தலைவர் அம்ர் மூஸா போன்றோர் ஆவர். இத்தகைய ஏகாதிபத்திய அடிவருடிகள் தாம் முர்ஸியின் இரத்தத்திற்காக தாகமெடுத்து தஹ்ரீர் சதுக்கத்தை அசுத்தமாக்கியவர்கள்.
ஒரு நூற்றாண்டின் பாரம்பரியம் கொண்ட எகிப்தின் வயல்வெளிகளில் வேலைப்பார்க்கும் விவசாயிகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளிகள் என அனைத்து தரப்பு மக்களின் வியர்வையாக மாறிய இஃவானின் உயர்மட்ட தலைவரான முர்ஸியை புரிந்துகொள்ள அல்பராதிக்கோ, அம்ர் மூஸாவுக்கோ சாத்தியமில்லைதான். முர்ஸி ஏற்கனவே கூறியதுபோல, தகர்ந்துபோன எகிப்தின் பொருளாதார கட்டமைப்பை உடனடியாக சீர் செய்யும் மந்திர தடி எதுவும் அவரிடம் இருக்கவில்லை. அத்தகைதொரு தடி முன்பு ஃபாரோ (ஃபிர்அவ்ன்) மன்னனை அதிகார பீடத்தில் இருந்து கீழே இறக்கிய இறைத்தூதர் மூஸா நபியிடம் இருந்தது. ஆனால், அதுபோன்றதொரு தடியை மீண்டும் கரத்தில் ஏந்துவது சாத்தியமல்ல. ஆனால், அதற்கு கடுமையான கட்டுப்பாடும், பொறுமையும், கடின உழைப்பும் தேவை.
அமெரிக்காவின் கொடூரமான அணுகுண்டு தாக்குதல்களால் அழிந்துபோன நாகசாகியும், ஹிரோஷிமாவையும் கொண்ட ஜப்பான் தேசம்,  அந்நாட்டு மக்களின் கடுமையான உழைப்பு, பொறுமை, கட்டுப்பாட்டின் காரணமாக இன்று உலக அரங்கில் உன்னத நிலையை அடைந்துள்ளது.ஆனால், எகிப்திய மக்களுக்கு ஒரு காலத்திலும் இல்லாததும் இந்த பொறுமையும், கட்டுப்பாடும்தான் என்பதை முர்ஸியை பதவி நீக்கம் செய்ததன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.
Info : NewIndia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக