புதன், ஜூலை 31, 2013

தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு காங்கிரஸ், ஐ.மு. கூட்டணி ஒப்புதல்!

புதுடெல்லி: ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.இதனால் நாடாளுமன்ற ஒப்புதல் மற்றும் சம்பிரதாய சட்ட நடைமுறைகளுக்கு பின்னர் தெலுங்கானா மாநிலம் உருவாவது உறுதியாகிவிட்டது. 

தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல் அளிப்பது என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைமை முன்னரே வந்துவிட்டது. ஆனால் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று காலை இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த அமைச்சர்களுடன் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். 

அப்போது ஏற்கனவே தீர்மானித்தபடி, இன்று மாலை நடைபெற உள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இறுதி முடிவெடுப்பது என்றும், அதற்கு முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டி, தெலுங்கானா மாநிலத்திற்கு ஒப்புதலை பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒப்புதல்:

அதன்படி அஜித் சிங், சரத் பவார் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் இத்தகவலை தெரிவித்தார். 

காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒப்புதல்:

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடியது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, நிதியமைச்சர் ப.சிதம்பரம், கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு ஒப்புதல் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 தெலுங்கானா மக்கள் மகிழ்ச்சி: 

இதனிடையே தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறித்து தெலுங்கானா பகுதி மக்களும்,  தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சித் ( டிஆர்எஸ்) தலைவர் சந்திரசேகர ராவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அப்பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அதே சமயம் தலைநகர் ஹைதராபாத்தை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார். 

மத்திய அமைச்சரவை கூட்டம்: 

இந்நிலையில் தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து, மத்திய அமைச்சரவை நாளை கூடி இது தொடர்பாக விவாதிக்க உள்ளது.

ஹைதராபாத்
இக்கூட்டத்தில் தலைநகர் ஹைதராபாத் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஹைதராபாத்தை ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டப்படி சில ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களின் கூட்டுத் தலைநகராக வைத்துக்கொள்வது மற்றும் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவது ஆகிய அம்சங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆந்திராவில் பாதுகாப்பு:

இதனிடையே தனித்தெலுங்கானா மாநிலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களால் போராட்டங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக