வெள்ளி, ஜூலை 12, 2013

இஷ்ரத் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்!-பாதுகாப்பு வழங்க தயார் மத்திய அரசு!

குஜராத்தில் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் குடும்பத்தினர், மர்ம நபர்களால் கொலை மிரட்டல் வருவதாக புகார் கூறியுள்ளனர். உரிய பாதுகாப்பு வழங்க தயார் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மும்ப்ராவை சேர்ந்த 19 வயது இளம்பெண் இஷ்ரத் ஜஹான். இவர் ஜாவேத் சேக் என்கிற பரனேஷ் பிள்ளை, அம்ஜத் அலி, அக்பர் அலி ராணா மற்றும் ஜீஷான் ஜோஹர் ஆகியோருடன் சேர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போலீசாரால் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2004–ம் ஆண்டு ஜூன் 15–ந் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. குற்றப்பிரிவை சேர்ந்த 7 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள முதல் குற்றப்பத்திரிகையில், இந்த போலி என்கவுன்டர் குஜராத் மாநில போலீஸ் மற்றும் நுண்ணறிவுப்பிரிவு இணைந்து நாடகத்தனமாக நடத்தியுள்ளதாக கூறியுள்ளது.
சிறப்பு டைரக்டர் ராஜேந்தர் குமார் மற்றும் 3 அதிகாரிகளுக்கு இதில் உள்ள தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இஷ்ரத் குடும்பத்தினருக்கு மர்ம நபர்களால் அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் வருவதாக அந்த குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். சிலர் போலீஸ் என்று கூறிக் கொண்டு அதிகாலை 2.30 மணிக்கு வந்து வீட்டு கதவை தட்டுகிறார்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது எல்லாம் கார்களில் பின் தொடர்கிறார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த புகார்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பாதுகாப்பு தேவை என்று அந்த குடும்பத்தினர் கேட்டால், அவர்களுக்கு உடனடியாக உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே கூறியிருக்கிறார்’’ என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக