மனிதர்கள் ஒவ்வொருக்கும் ஒரு பெயர் இருப்பது போல் டால்பின் மீன்களுக்கும் பெயர் இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதனைத் தவிர பேசும் சக்தி பறவையினமான கிளிகளுக்கு தான் இருக்கிறது. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல்... என்றும் சொல்லும் அளவிற்கு ஒரு வகை கிளிகள் பேசும் திறன் கொண்டிருக்கின்றன.ஆனால் விலங்கினங்களில் டால்பின் மீன்களுக்கு இந்த சக்தி இருக்கிறது என்பது தான் ஸ்காட்லாந்து விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவு.
ஸ்காட்லாந்து நாட்டின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அண்மையில் டால்பின் மீன்கள் குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அந்த ஆராய்ச்சியில், டால்பின் மீன்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஒரு விதமான பிரத்யேக பெயர் சொல்லியே அழைப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?...ஒவ்வொரு டால்பின் மீனும் ஒரு பிரத்யேக விசில் சத்தத்தை எழுப்பும் திறன் கொண்டிருக்கிறது. ஒரு கூட்டத்தில் 10க்கும் மேற்பட்ட டால்பின்கள் இருக்கும் போது குறிப்பிட்ட ஒரு வகை விசல் ஒலியை ஒரு டால்பின் எழுப்பும் போது அந்த விசில் ஒலிக்கு மற்றொரு குறிப்பிட்ட டால்பின் பதில் அளிக்கிறது. இதனை சிக்னேச்சர் விஷில் (Signature whistle) என்றழைக்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த சோதனைக்காக 12 டால்பின் மீன்களை தேர்வு செய்த விஞ்ஞானிகள், அவை எழுப்பும் வித்தியாச விசில் சத்தங்களை பதிவு செய்தனர். பின்னர் நீரின் அடியிலும் வேலை செய்யக்கூடிய உபகரணத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட ஓசைகளை ஒலிக்கச் செய்தனர்.
ஒவ்வொரு வகையான ஓசைக்கும் ஒவ்வொரு டால்பின் மீன் திரும்புவதையும், பதில் ஒலி ஏற்படுத்துவதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதே நேரத்தில் அந்த கூட்டத்தில் இல்லாத மற்ற டால்பின்களை ஒலிக்கு எந்த வித பதில் ஒலியும் எழுப்புவதில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். எனவே டால்பின் மீன்களுக்கு பெயர் இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக