செவ்வாய், ஜூலை 09, 2013

புத்த கயா குண்டுவெடிப்பு: நேர்மையான விசாரணையை உறுதி செய்யுமா உச்சநீதிமன்றம்!

பீகார் மாநிலத்தில் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப் பட்ட புத்த கோவிலில் கடந்த​ ​ஞாயிறன்று அதிகாலை 5.30 மணி அளவிலிருந்து 6 மணி வரை சுமார் 9 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.

இறைவனின் அருளால் பெரிய உயிரிழப்புகள் எதுவும் இல்லை. இரு புத்த துறவிகள் காயமடைந்துள்ளனர். ​​மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அதி காலை, ​​சுமார் 13 இடங்களில்​ ​குண்டுகள் வைக்கப் பட்டுள்ளன.
குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்து வருகிறது. குண்டு வெடிப்பு தொடர்பாக அடையாள அட்டையைக் கோவிலில் விட்டுச் சென்ற வினோத் மிஸ்ரி என்பவரும், கொல்கத்தாவில் ஒருவரும் கைது செய்யப் பட்டு விசாரிக்கப் பட்டு வருகின்றனர்.​ வினோத் மிஸ்ரி ஒரு புத்த சன்னியாசியல்லாத நிலையில், புத்த சன்னியாசி வேடமணிந்து கோவிலில் வந்துள்ளது வீடியோவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது உள் வேலையாக இருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.​
இன்னும் விசாரணை முழுவதும் முழுமை பெறாத நிலையில் வழக்கம் போலவே ஊடகங்கள் இந்தக் குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன்கள் தான் காரணம் என்றும் மியான்மரிலும், ஸ்ரீ லங்காவிலும் முஸ்லீம்கள் தாக்கப் பட்டதற்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன. முஸ்லீம்கள் தாக்கப் பட்டதற்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப் பட்டதாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் என்று கூறப் படும் ரியாஸ் பட்கலே ஊடகங்களிடம் வந்து கூறினாரா என்பது தெரியவில்லை!
இந்தியாவில் இதற்கு​ முன்னர் ​நடத்தப்பட்ட மாலேகான், சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் உள்ளிட்ட பல குண்டுவெடிப்புகளில் ஒரு தரப்பினரைக் குற்றவாளிகள் எனக் கருதி​ ​கைது செய்து சித்ரவதை செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக் கொள்ளவைத்த பின்னர் சில நேர்மையான அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர் நிஜகுற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதும் அனைவரும்​ அறிந்த​ ஒன்றே.
இந்நிலையில் யாரையோ காப்பாற்றும் நோக்கில் அனைத்து ஊடகங்களும் குண்டு வெடித்த ஒரு மணி நேரத்தில் ஒரே பெயரை உச்சரிப்பதும் தலையங்கம் தீட்டி தாம் சார்ந்த மத அமைப்புகளுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொள்வதும் நல்லதல்ல.
புத்த கோவில் தாக்கப்படலாம் என கடந்த வருடம் அக்டோபர் மாதமே மத்திய உளவுத் துறை எச்சரிக்கை செய்ததாகவும்​ எனினும் பீகார் மாநில அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்தப் பயங்கரவாத தாக்குதல் நடந்தது எனவும் ஒரு சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மியான்மரிலும் ஸ்ரீ லங்காவிலும் கடந்த 4 ,5 மாதங்களாகவே முஸ்லீம்கள் தாக்கப் பட்டு வரும் நிலையில், 9 மாதங்களுக்கு முன்னரே நடக்காத தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியது எப்படி?
இதில் இன்னொரு விசயமும் உண்டு. மியான்மரிலும், ஸ்ரீலங்காவிலும் முஸ்லீம்கள் தாக்கப் படுவதை உணர்ந்துள்ள பயங்கரவாத இயக்கங்கள் முஸ்லீம்களின் மீதான பௌத்தர்களின் கோபம் இன்னும் பல மடங்கு அதிகரிப்பதற்காக ஏன் இத்தாக்குதலை நடத்தி இருக்கக் கூடாது?
சில மாதங்களுக்கு முன்னர் பயங்கர தாக்குதல் நடத்த டெல்லி வந்ததாக ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கதினைச் சேர்ந்தவர் எனக் கூறி லியாகத் அலி ஷா என்பவரை டெல்லி காவல்துறை கைது செய்தது. அவரைக் கைது செய்வதற்கு முன்னர் டெல்லி ஜாமியா மஸ்ஜித் அருகே உள்ள ஹோட்டலில் சோதனை நடத்தி பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை மீட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்தது.

ஜாமியா மஸ்ஜித் அருகே செயல்படும் தங்கும் விடுதியில் ஆயுதங்களை​க்​ கொண்டு வைத்து விட்டு பயங்கரவாதி ஒருவன் தப்பி ஓடி விட்டதாகவும் தங்கும் விடுதியில் உள்ள சி சி டி வி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை டெல்லி காவல்துறை வெளியிட்டது.
தங்கும் விடுதியில் பயங்கர ஆயுதங்களை வைத்து விட்டு தப்பிச் சென்ற பயங்கரவாதி இது வரை கைது செய்யப் படாததும் ஊடகங்களும் இது குறித்து எந்த கேள்வியும் எழுப்பாததும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது
லியாகத் அலி ஷா டெல்லியைத் தாக்க பயங்கர சதி திட்டத்துடன் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக வரும் பொது கைது செய்யப் பட்டதாக காவல்துறை தெரிவித்த நிலையில், ஜம்மு மாநில அரசும் காவல்துறையும் லியாகத் அலி ஷா டெல்லியைத் தாக்க வர வில்லை என்றும் ஜம்மு மாநில அரசின் மறு வாழ்வளிப்பு திட்டத்தின் மூலம் மாநில அரசிடம் சரணடைய வந்ததாகவும் தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் இப்பிரச்னையை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்ற நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிட்டது.
தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில், லியாகத் அலி ஷாவுக்கு எதிராக டெல்லி காவல்துறை அளித்த ஆதாரங்கள் உறுதி செய்யப் படாததால் லியாகத் அலி ஷா பிணையில் விடுவிக்கப் பட்டார். மத்திய உள்துறை அமைச்சகம் சரியான நேரத்தில் தலையிட்டு விசாரணையைத் தேசிய புலனாய்வு அமைப்பு வசம் ஒப்படைத்து இருக்கா விட்டால் போலி என்கவுண்டரில் லியாகத் அலி ஷா கொலை செய்யப் பட்டு இருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
பயங்கரவாதிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தண்டிக்கப் படுபவர்கள் உண்மையான​ பயங்கரவாதிகள் தானா என்பதில் தான் பலத்த சர்ச்சை உள்ளது. பல குண்டுவெடிப்பு வழக்குகளிலும் அப்பாவிகள் கைது செய்யப் படுவதால், உண்மையான பயங்கரவாதிகள் வெளியே சுற்றித் திரிந்து மீண்டும் மீண்டும் பல்வேறு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர்.
மத்திய அரசையும் நம்ப முடிய வில்லை; மாநில அரசுகளையும் நம்ப முடிய வில்லை. மத்திய மாநில அரசுகளே ஊடகங்களின் பொய்ப் பிரசாரத்துக்குத் துணை போகிறதோ என்ற அச்சமும் உள்ளது.
உச்ச​ ​நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு இது போன்ற பயங்கரவாத தாக்குதல் வழக்குகளை தாமே கையிலெடுத்து,​ ​நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை முடியும் வரை ஊடகங்களுக்கு வாய்ப் பூட்டு​ போடுவதோடு, நிஜ குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு உச்ச பட்ச தண்டனை வழங்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக