திங்கள், ஜூலை 29, 2013

இந்து தலைவர்கள் மீதான தாக்குதல் தனிப்பட்ட விரோதங்களால் நிகழ்ந்தவை!-டி.ஜி.பி விளக்கம்!

சென்னை: பாஜக மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் கொலை வழக்கு மற்றும் இந்து இயக்கத் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸôர் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பல வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார். எந்தவொரு இயக்கத்தின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்தினாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, டிஜிபி ராமானுஜம் வெள்ளிக்கிழமை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளதாவது: பாஜக மூத்த தலைவர் அத்வானி மதுரை வந்த போது திருமங்கலம் அருகில் பாலத்தின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. அது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
கடந்த மாதம் மற்றொரு குற்றவாளி கைது செய்யப்பட்டார். மேலும் மூன்று குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோன்று நாகப்பட்டினத்தில் பாஜக மாநில பொதுக் குழு உறுப்பினர் புகழேந்தி கொலை செய்யப்பட்டார். பணம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக நடந்த இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் நீதிமன்றத்திலும் சரண் அடைந்தனர். ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
பாஜக மாநில மருத்துவ அணிச் செயலாளர் அரவிந்த ரெட்டி பணப் பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, 7 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்தன் கொலை முயற்சி வழக்கில் ஒருவரும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர பாஜக செயலாளர் முருகன் என்பவ நிலப் பரிமாற்றப் பிரச்னையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரும் கைது செய்யப்பட்டு, அனைவரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
கோவையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வீட்டின் மீது தாக்குதல், உதகை இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத் மீதான தாக்குதல், குன்னூரில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஹரிஹரன் மீது தாக்குதல், நாகர்கோவிலில் பாஜக மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி மீதான தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்குத் தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்து வரும் 4 பேர் குறித்து தகவல் தந்தால் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும். வேறு குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களைக் கைது செய்யத் தகவல்களை அளித்தால் ரூ.2 லட்சம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து இயக்கத் தலைவர்களில் அச்சுறுத்தல் இருக்கக் கூடும் என்று கருதப்படுபவர்களுக்கும், கட்சி அலுவலகங்களுக்கும், காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்து இயக்கத் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் சில, தனிப்பட்ட விரோதங்களால் நிகழ்ந்தவை. சில வழக்குகளில் குற்றவாளிகளாக இருப்பவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் மதத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். குறிப்பிட்ட நபர்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்துவது தடுக்கப்படவில்லை அல்லது வழக்குகள் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற எண்ணத்தை உருவாக்க முயற்சிப்பது தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது என்று ராமானுஜம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக