கும்பகோணம் பள்ளியில் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த அந்த சம்பவத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. உயிரிழந்த அந்த குழந்தைகளின் 9-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
2004-ம் ஆண்டு ஜுலை 16- ஆம் தேதி கும்பகோணத்தில் நடந்த அந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர செய்தது. சிரித்த முகத்துடன் அழகிய மலர்களாக பள்ளிக்கு சென்ற குழந்தைகள் கருகிய மலர்களாக மாறிய அந்த தருணத்தை எந்த பெற்றோரும் மறக்க முடியாது. காசிராமன் தெருவில் இயங்கி வந்த சரஸ்வதி நர்சரி பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து 94 குழந்தைகளின் உயிரைக் குடித்தது. இந்த துயரச்சம்பவம் தொடர்பாக அந்த பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமி, தாளாளர் சரஸ்வதி உள்பட 24 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு, பின்னர் தஞ்சை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த வழக்கு முடிவுறாமல் நீண்டு கொண்டே சென்றது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விரைவில் முடிக்கக் கோரி பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை 6 மாத்தத்திற்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 11 மாதங்களாகியும் விசாரணை முடியவில்லை என்கிறார் தீ விபத்தில் தன் இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த இன்பராஜ்.
இந்த வழக்கில் இதுவரை 165 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 50 பேரிடம் விசாரணை செய்யப்படவேண்டும். எனவே இந்த வழக்கை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாதிக்கப்பட்ட பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஜுலை 16-ஆம் தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாகவும் அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த துயரச்சம்பவம் நடந்து 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த ஆண்டிலாவது இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக