புதன், ஜூலை 24, 2013

பா.ஜ.க பந்த்: இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம்!

சென்னை: சேலத்தில் பா.ஜ.க வின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று (22.7.2013) தமிழகத்தில் முழு கடையடைப்புக்கு அக்கட்சி அழைப்பு விடுத்தது. பா.ஜ.க. நடத்திய இந்த பந்த் தொல்வியை தழுவியது என்றாலும் பல இடங்களில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதும், வணிக நிர்வனங்கள் மீதும் பா.ஜ.க வினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  ஏ.கே முஹம்மது ஹனிபா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டதை முஸ்லிம் சமுதாயம் கடுமையாக கண்டிக்கிறது. இதுபோன்ற கொடிய நிகழ்வுகள் அமைதிப்பூங்காவான தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறோம். அதே நேரத்தில் இந்த கொலையின் பின்னணி பற்றி முறையாக புலனாய்வு வெளிவருவதற்கு முன்பாகவே பா.ஜ.க பிரமுகர் கொலை என்றாலே அதை முஸ்லிம்கள் தான் செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் ஊதி பெரிதாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதற்கு முன்பும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதற்கு பல்வேறு காரணங்கள் இருப்தையையும் அறியமுடிகிறது. அதுபோன்று இந்த படுகொலையையும் நியாய உணர்வோடும் நடுநிலையோடும் அரசும் காவல்துறையும் அனுக வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்துத்துவா சக்திகளும் சமூக விரோதிகளும் இணைந்து இந்து – முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைத்து விடுவார்களோ என்ற ஐய்யப்பாடு எழுந்துள்ளது.
எனவே தமிழக முதல்வர் அவர்கள் இந்த கொலை விவகாரத்தில் உண்மைகுற்றவாளியை கண்டிறிய தமிழக காவல்துறைக்கு உரிய அறிவுரை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என இந்த கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இந்த படுகொலை குறித்து விசாரிப்பதற்கு தமிழக முதல்வர் சிறப்பு புலனாய்விற்கு உத்தரவிட்டதை வரவேற்கின்றோம். மேலும் முஸ்லிம் சமுதாயத்தின் வழிபாட்டு தளங்களும், வணிக நிறுவனங்களும் , அப்பாவி முஸ்லிம்களும் தாக்கப்பட்டு வருகிறார்கள் எனவே தமிழக முதல்வர் அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்த கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது" என அவர் தெரிவித்தார்.
இதன் பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த எஸ்.டி.பி.ஐ யின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி அவர்கள் கூறுகையில்: "தமிழகத்தின் தனி செல்வாக்கை ஏற்படுத்த இந்த படுகொலையை பா.ஜ.க பயன்படுத்துகிறது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு உட்கட்சி மோதல், பெண் தொடர்பு, நில தகராறு, தொழில் போட்டி, ரியல் எஸ்டேட் வியாபாரம் என பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இதே போன்று இதற்கு முன் படுகொலை செய்யப்பட்ட பி.ஜே.பி பிரமுகர் சென்னையில் விட்டல் என்பவர் கட்டப்பஞ்சாயத்து நிலத்தகராறிலும், நாகையில் புகழேந்தி என்பவர் நிலத்தகராறிலும், பரமக்குடியில் முருகன் என்பவர் நிலத்தகராறிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வேலூரில் படுகொலை செய்யப்பட்டுள்ள அரவிந் ரெட்டி பெண் தொடர்பால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் யாரும் முஸ்லிம்கள் இல்லை வேலூரில் படுகொலை செய்யப்பட்ட வெள்ளையப்பன் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறை சொல்கிறது. ஆடிட்டர் ரமேஷ் படுகொலையிலும் இது போன்று எதாவது ஒரு காரணம் இருக்கும். 
எனவே விசாரணைக்கு முன்பாகவே கொலையை காரணம் காட்டி அரசியல் லாபமடைய துடிக்கும் பா.ஜ.கவை வண்மையாக கண்டிக்கிறோம். நேற்று நடைபெற்ற பந்தை காரணம் காட்டி கோவை முஸ்லிம் வழிபாட்டுதளம் மீது வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது, காரைக்காலில் ஒரு முஸ்லிம் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். திண்டுக்கல் உட்பட பல்வேறு ஊர்களில் முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. நடைபெற்ற மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷ மிகுந்த முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றை வண்மையாக கண்டிக்கிறோம். இவற்றிர்க்கு எதிராக காவல்துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
நேற்று நடைபெற்ற பந்தில் மட்டும் பி.ஜே.பி கட்சியினரால் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் பி.ஜே.பி யினர் நடத்திய பந்தில் கோவை மற்றும் குமரியில் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளன. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக பா.ம.கவினர் இந்த நஷ்ட ஈட்டை பெற நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு மற்றும் காவல்துறை பி.ஜே.பி யினர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்வதோடு நஷ்டமடைந்த தொகையை பி.ஜே.பியினரிடம் வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார், அண்ணா வால் பண்படுத்தப்பட்ட தமிழகத்தில் பிணத்தை வைத்து அரசியல் நடத்தி மக்களை பிளவு படுத்தி குளிர் காயும் பா.ஜ.கவினரின் சூழ்ச்சிக்கு யாரும் பலியாக வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என அவர் தெரிவித்தார். இது போன்று ம.ம.க பொதுச்செயலாளர் அப்துல் சமது மற்றும் வெல்பேர் பார்ட்டி சிக்கந்தர் ஆகியோர் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே முஹம்மது ஹனிபா, எஸ்.டி.பி.ஐ யின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் சேக் அன்சாரி, மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, வெல்பேர் பார்ட்டியின் சிக்கந்தர், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைத்தலைவர் முஹம்மது முனீர், ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் மாநில பொதுச்செயலாளர் மன்சூர் காசிபி, மில்லிகவுன்சில் இப்னுசவூத், இந்தி யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பாத்திமா முசப்பர், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மாநில பொதுச்செயலாளர் ஜலாலு தீன் உமரி, மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் தலைவர் உமர் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக