புதன், ஜூலை 31, 2013

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர்: ஷஹ்ஸாத் அஹ்மதிற்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு!

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் சம்பவத்தின் போது மோகன்சந்த் சர்மா கொலையில் போலீஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட  ஷஹ்ஸாத் அஹ்மதிற்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் சம்பவத்தில் டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன்சந்த் சர்மா கொல்லப்பட்ட வழக்கில், போலீஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரே நபரான ஷஹ்ஸாத் அஹ்மதை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜீந்தர் குமார் சாஸ்திரி ஷஹ்ஸாதை கடந்த ஜூலை 25 அன்று குற்றவாளி என அறிவித்தார்.
இன்ஸ்பெக்டர் மோகன்சந்த் சர்மாவின் கொலை, தலைமைக் காவலர்கள் பல்வந்த் சிங், ரஜ்பீர் சிங் ஆகியோரை கொலைச்செய்ய நடந்த முயற்சி ஆகிய வழக்குகளில் ஷஹ்ஸாத் குற்றவாளி என்றும், போலீஸ் அதிகாரிகளின் பணியை அவர் தடுத்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
2008-ம் ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி டெல்லி, ஜாமியா நகர் பகுதியில் பட்லா ஹவுஸில் உள்ள எல் 18 எண் ப்ளாக்கில் 108 வது எண் ப்ளாட்டில் போலி என்கவுண்டர் அரங்கேறியது. செப்டம்பர் 13-ஆம் தேதி டெல்லியில் தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்திய இந்திய முஜாஹிதீன் உறுப்பினர்கள் இந்த ப்ளாட்டில் தங்கியிருந்ததாக கூறி அந்த ப்ளாட்டிற்குள் போலீஸ் அத்துமீறி நுழைந்தது.
என்கவுண்டரில் ப்ளாட்டில் வசித்த ஜாமிஆ மில்லியா மாணவர்கள் ஆதிஃப் அமீன் மற்றும் முஹம்மது ஸாஜித் ஆகிய அப்பாவிகள் அநியாயமாக படுகொலைச் செய்யப்பட்டனர். இந்த போலி என்கவுண்டரில் ஈடுபட்ட மோகன்ச்ந்த சர்மாவும் கொல்லப்பட்டார். சர்மாவை சுட்ட பிறகு குற்றம் சாட்டப்பட்ட ஜுனைதுடன், ஷஹ்ஸாத் தப்பிச் சென்றார் என்பது அரசு தரப்பு வாதம். தற்காப்புக்காக திருப்பிச் சுட்டபோது இரண்டு இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் மரணித்ததாக போலீஸ் கூறியது.
ஷஹ்ஸாத் 2010-ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். ஜுனைதை இதுவரை பிடிக்கவில்லை. இவர்களை தவிர முஹம்மது ஸைஃப் என்ற இளைஞரும் ப்ளாட்டில் இருந்தார் என்பது போலீஸின் வாதமாகும்.
70 சாட்சிகளை விசாரணைச் செய்ததில், நேரடி சாட்சிகளாக போலீஸ் ஆஜர்படுத்திய ஆறுபேரும் பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டரில் பங்கேற்ற போலீஸ்காரர்கள் ஆவர். ஆனால், போலி என்கவுண்டர் அரங்கேறிய பாட்லா ஹவுஸில் இருந்து ஒரு சாட்சியைக் கூட ஆஜர்படுத்த போலீஸால் இயலவில்லை.
விசாரணை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்போவதாக ஷஹ்ஸாதின் உறவினர் இஃப்திஹார் அஹ்மது தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக