புதன், ஜூலை 24, 2013

தீவிரவாதத்தின் அடையாளம் பாரதீய ஜனதா கட்சி!-காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சி தீவிரவாதத்தின் அடையாளக் குறியீடு என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மீம் அஃப்ஸல் கூறியுள்ளார். முன்னதாக, குஜராத் இனப்படுகொலையால் தான் இந்திய முஜாஹிதீன் என்கிற தீவிரவாத இயக்கம் உருவானது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது கூறியிருந்தது அறிந்ததே.

இக்கருத்துக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மீம் அஃஸலிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்ட போது, "பாரதீய ஜனதா கட்சி, தீவிரவாதத்தின் அடையாளமாக திகழ்கிறது. 2002–ம் ஆண்டு குஜராத்தில் அவர்கள் செய்தது தீவிரவாதத்தை விட சற்றும் குறைந்தது அல்ல. தீவிரவாதம் என்றால் என்ன? அப்பாவி மக்களை கொல்வதும், அவர்களுக்கு கேடு செய்வதும் தான் தீவிரவாதம். பாரதீய ஜனதா என்ன செய்தது என்பது குறித்து நான் புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. ஊடகங்களே அதை சொல்லி வந்திருக்கின்றன. 
ஷகீல் அகமதுவின் கருத்துகள் பற்றி கேட்கிறீர்கள். அவர் கூறிய கருத்துகள் தனிப்பட்ட கருத்துகள் என்று அவரே சொல்லி விட்டார். கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகள் எழுந்தால், அது ஜனநாயகத்தின் பலம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே இது குறித்து மேலும் கேட்க விரும்பினால், அவரிடமே கேட்பது நல்லது" என்று பதிலளித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய்சிங் ஷகீல் அகமதுவின் கருத்தை நியாயப்படுத்தி கூறுகையில் "1980 களில் அத்வானியின் ரத யாத்திரைக்கு பின்னர் தான் அரசியலில் மதவாதம் புகுந்தது. தீவிரவாதச் சம்பவங்கள் அதன் பின்னரே அரங்கேறத் தொடங்கின. ஷகீல் அகமதுவின் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக கட்சி அவரை கண்டிக்கும் என்றோ, அவரது கருத்துகளை திரும்பப் பெறுமாறு கட்சி கூறும் என்றோ நான் கருதவில்லை’’ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக