செவ்வாய், ஜூலை 23, 2013

ஆஃபியா சித்தீகி பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படுவார்!

வாஷிங்டன்: பாகிஸ்தானைச் சார்ந்த விஞ்ஞானி ஆஃபியா சித்தீகியை அமெரிக்கா அந்நாட்டிடம் ஒப்படைக்க உள்ளது. இதுத்தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பரஸ்பரம் கைதிகளை பரிமாறும் வாக்குறுதியை அமெரிக்கா முன்வைத்தது. ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றால் ஆஃபிய பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்படுவார்.


2008 ஜூலை மாதம் ஆப்கானில் போலீஸ் தலைமையகத்தில் வைத்து அமெரிக்க ராணுவ வீரரின் துப்பாக்கியை தட்டிப்பறித்து, அருகில் இருந்த எஃப்.பி.ஐ ஏஜண்டுகளையும், ராணுவத்தினரையும் கொலைச் செய்ய முயன்றார் என்பது ஆஃபியா மீதான அமெரிக்காவின் அபாண்டமான குற்றச்சாட்டாகும். இவர் கைதுச் செய்யப்பட்ட பிறகு ரகசியமாக அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டார். தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று ஆஃபியா விசாரணை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

86 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட ஆஃபியா, தற்போது டெக்ஸாஸில் கார்ல்ஸ் வெல்லில் உள்ள பிரசித்திப்பெற்ற ஃபெடரல் மெடிக்கல் செண்டரில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இவரை விடுதலைச் செய்யக்கோரி பாகிஸ்தானிலும், வெளிநாடுகளிலும் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது.

ஆஃபியா அல்காயிதா ஏஜண்ட் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஆஃபியாவின் குடும்பத்தினர் மறுக்கின்றனர். ஆஃபியாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்துள்ளன. அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பை பாகிஸ்தான் அங்கீகரிக்கவேண்டும் என்பது கைதிகளை பரிமாறும் ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்தாகும். ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படும் என கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக