புதன், ஜூலை 17, 2013

பிகார்: அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 16 குழந்தைகள் பலி!

பிகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தரமற்ற மதிய உணவைச் சாப்பிட்ட சம்பவத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. பிகாரின் சரன் மாவட்டத்தில் உள்ள மஸ்ராஹ் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் திடீரென வாந்தி எடுத்தனர். சிலர் மயக்கமடைந்தனர். பள்ளியிலேயே 5 குழந்தைகள் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குழந்தைகள் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுவரை 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

பலியான குழந்தைகள் அனைவரும் ஒன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள். தரமற்ற உணவை குழந்தைகளுக்கு கொடுத்ததே உயிர் பலிக்கு காரணம் என தெரியவந்துள்ளது. உணவில் எந்த வகையான நஞ்சு கலந்தது என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
16 குழந்தைகள் இறந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று ராம் விலாஸ் பாஸ்வான் கோரியுள்ளார். குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி அப்பகுதியில் முழு அடைப்புப் போராட்டம் அறிவித்துள்ளது. மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் மீது எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக