திங்கள், ஜூலை 08, 2013

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அயோத்தியில் ராமர்கோயில் கட்டப்படுமாம்! - அமித் ஷா கூறுகிறார்!

பாஜக ஆட்சிக்கு வந்ததும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக பொறுப்பாளர் அமித் ஷா தெரிவித்தார். குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் முதல்வர் நரேந்திர மோடியின் கூட்டாளியுமான அமித் ஷா, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு சனிக்கிழமை வருகை தந்து வழிபாடு நடத்தினார். உத்தரப் பிரதேச மாநில பாஜக பொறுப்பாளராக பதவி ஏற்றபின் முதல் முறையாக அவர் வந்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கையாக(?) விளங்கும் ராமர் கோயிலில் வழிபட வந்துள்ளேன். மத்தியில் நல்ல அரசு ஆட்சிக்கு வரவும், மேலும், காங்கிரஸ் கட்சியின் பிடியில் இருந்து தேசம் விடுபடவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டேன்(?). ராமருக்கு பிரமாண்டமான கோயில் கட்ட தேவையான வழிமுறைகளை ஏற்படுத்தித் தருமாறும் வேண்டினேன் என்றார்.
அப்போது இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில், சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது பற்றிய கேள்விக்கு அமித் ஷா பதில் ஏதும் சொல்லவில்லை.
போலி என்கவுன்ட்டர் நடைபெற்ற 2004-ஆம் ஆண்டு, குஜராத்தில் மாநில உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித் ஷா. இந்த நிலையில், சிபிஐ தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அடுத்து தாக்கல் செய்யப்பட உள்ள துணைக் குற்றப்பத்திரிக்கையில் இவரது பெயர் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை மீண்டும் கையில் எடுப்பதன் மூலம் இந்த மாநிலத்தில் சுமார் 40 இடங்களையாவது கைப்பற்ற முடியும் என்று பாஜக கணக்குப் போடுவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Source : NewIndia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக