வாஷிங்டன்: அமெரிக்க உளவு அமைப்பின் முன்னாள் தொழில்நுட்ப பணியாளர் ஸ்நோடென்னுக்கு அடைக்கலம் தர தயார் என வெனிசுலா, நிகரகுவா அரசுகள் அறிவித்துள்ளன. அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ., இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை இணையம் மூலம் ரகசியமாக கண்காணிப்பதாக ஸ்நோடென் அம்பலப்படுத்தினார்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வசித்த அவர், அடைக்கலம் தேடி ரஷியாவுக்குச் சென்றார். அங்குள்ள விமான நிலைய வளாகத்திலேயே கடந்த ஒரு வாரமாக தங்கியுள்ளார். இந்நிலையில், அடைக்கலம் கேட்டு இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். அமெரிக்காவின் ரகசிய தகவல்களை திருடியதாக ஸ்நோடென் மீது வழக்குப் பதிந்த அந்நாட்டு அரசு, அவருக்கு யாரும் அடைக்கலம் தரக் கூடாது என்று அனைத்து நாடுகளிடமும் வலியுறுத்தி வந்தது. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் ஸ்நோடென்னுக்கு அடைக்கலம் தர மறுத்துவிட்டன. இதையடுத்து மேலும் 6 நாடுகளிடம் ஸ்நோடென் அடைக்கலம் கோரியிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு அடைக்கலம் தர விரும்புவதாக வெனிசுலா, நிகரகுவா நாடுகள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக வெனிசுலா சுதந்திர தின ராணுவப் பேரணியில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கூறியதாவது:"மனிதாபிமான அடிப்படையில் ஸ்நோடென்னுக்கு அடைக்கலம் தர முடிவு செய்துள்ளோம்'' என்றார்.
அதே போன்று நிகரகுவா அதிபர் டேனியல் ஓர்டேகா கூறுகையில், ""சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஏற்பட்டால் ஸ்நோடென்னுக்கு அடைக்கலம் தர தயாராக இருக்கிறோம். பிற நாடுகளை தொழில்நுட்பத்தின் மூலம் உளவு பார்க்கும் அமெரிக்காவின் செயலை அம்பலப்படுத்தியவருக்கு உதவ, இறையாண்மையுள்ள நாடு என்ற வகையில் எங்களுக்கு உரிமை உள்ளது'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக