குஜராத் மாநிலத்தை மோடி வளர்ச்சி பெறச் செய்துள்ளார் என்பது உண்மைக்குப் புறம்பாக மிகைப்படுத்தப்பட்ட தவறான தகவல் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த சிதம்பரம் இவ்வாறு தெரிவித்தார்.
பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே இல்லை. அவர்களது நோக்கம் மதச்சார்பின்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. எனவே அடுத்த மக்களவைத் தேர்தலிலும் மக்கள் அக்கட்சியை நிராகரிப்பார்கள்.
பொது சிவில் சட்டம், அயோத்தி விவகாரம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்சாசன சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவது என்பது போன்ற பிரிவினைவாத பிரச்னைகளை பாஜக தொடர்ந்து எழுப்பி வருகிறது என்று சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதா? என்ற கேள்விக்கு, “இது பொருத்தமில்லாத கேள்வி. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்றால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியும். மக்கள் சரியான முடிவை அளிப்பார்கள்.
காங்கிரஸ் எந்த தனிப்பட்ட நபருக்கு எதிராகவும் போராடப் போவது இல்லை. 2004, 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக நிராகரிக்கப்பட்டது போல், அடுத்த ஆண்டு தேர்தலிலும் நிராகரிக்கப்படும்.” என்று சிதம்பரம் பதிலளித்தார்.
மோடி, பாஜக தேர்தல் பிரசாரக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், “மோடி பிரிவினையை ஏற்படுத்துபவர். பாஜகவின் உயர்நிலை தலைவர்களில் பலர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவரால் பாஜகவிலேயே பிரிவினை ஏற்பட்டுள்ளது.” என்றார்.
மோடி இரும்பு மனிதர், பலம் வாய்ந்த தலைவர் என்று வர்ணிக்கப்படுவது குறித்த கேள்விக்கு, “இரும்புத் தலைவர் என்று வர்ணிக்கப்படுபவர் (அத்வானி) தலைமையில்தான் 2009-ம் ஆண்டு தேர்தலை பாஜக சந்தித்தது. ஆனால் தேர்தலில் முன்பைவிட குறைவான இடங்களையே அவர்கள் பெற முடிந்தது. வலுவானவர், பலவீனமானவர் என்று ஊடகங்களே ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.” என்று பதிலளித்தார்.
“குஜராத் மாநிலத்தை மோடி வளர்ச்சி பெறச் செய்துள்ளார் என்பது உண்மைக்குப் புறம்பாக மிகைப்படுத்தப்பட்ட தவறான தகவல். குஜராத்தில் அவர்கள் காட்டும் வளர்ச்சி, ஒருங்கிணைந்த வளர்ச்சியல்ல. பெரும்பான்மையான குஜராத் மக்களை பின்னுக்குத் தள்ளி ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சி. அது ஒரு மாயை. குஜராத் போன்ற மாநிலத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு வேண்டுமானால் பொருந்துவதாக இருக்கலாம். ஆனால் நாடு முழுவதற்கும் இந்த வளர்ச்சித் திட்டம் பொருந்தாது.
உத்தர்கண்ட் வெள்ளத்தில் குஜராத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் பேரை மோடி மீட்டதாகக் கூறுகிறார்கள். அது கட்டுக்கதை. அவரது மேலாளர்களும், பணியாளர்களும் ஒன்றரை லட்சம் பேரைக் காப்பாற்றியதாகக் கூட கூறுவார்கள். அவர்கள் கொண்டு வந்ததாகக் கூறும் 80 கார்கள், 4 விமானங்களில் அதிகபட்சமாக 2,300 பேரை வேண்டுமானால் அழைத்துச் செல்ல முடியும்.” என்று சிதம்பரம் கூறினார்.
Source : NewIndia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக