வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட 38 நாடுகளின் தூதரகங்களை அமெரிக்க புலனாய்வுத் துறையினர் உளவு பார்த்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிய எட்வர்டு ஸ்நோடென், தன் நாட்டு தேசிய பாதுகாப்பு அமைப்பின் அத்துமீறல் உளவு நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை பதிவு செய்த லேப்டாப்புடன் கடந்த மாதம் ஹாங்காங்குக்கு தப்பி வந்தார். அங்கு அந்த ஆவணங்களை உலகுக்கு வெளியிட்டார்.
இதனால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக இறங்கி உள்ளது. ஆனால், ஹாங்காங்கில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற அவர், ஈகுவடார் நாட்டிடம் அடைக்கலம் கேட்டுள்ளார். தற்போது அவர் எங்கு உள்ளார் என்பது ரகசியமாக உள்ளது. சீனாவை, அமெரிக்கா உளவு பார்த்த விஷயம் தெரியவந்தபோது, சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், ஸ்நோடென் வெளியிட்ட ரகசிய ஆவணங்களை ஆராய்ந்து லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
ஸ்நோடென் வெளியிட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்எஸ்ஏ) ரகசிய ஆவணங்களில் ஒன்றில் 38 நாட்டு தூதரங்களின் பெயர்கள் உள்ளன. இவை அனைத்தும், ‘இலக்குகள்’ என்று குறிக்கப்பட்டுள்ளன. அதாவது இவற்றை உளவு பார்க்க வேண்டியவை என்று என்எஸ்ஏ குறித்துள்ளது. இதில் இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, கிரேக்க நாடுகளின் தூதரகங்களின் பெயர்கள் உள்ளன. ஐரோப்பிய யூனியன் தூதரகம், அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் தப்பவில்லை. ஆனால், இதில், இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் இடம்பெறவில்லை. இந்த உளவுப்பணிக்கு பல்வேறு நவீன தொழில்நுட்ப கருவிகளை என்எஸ்ஏ பயன்படுத்தி உள்ளது.
அதாவது உள்ளே இருப்பவர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுகேட்பதற்காக, நவீன ஆன்டனாக்களும், ஒட்டுகேட்பு கருவிகளும் வயர்களில் ரகசியமாக பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல், ஐரோப்பிய யூனியன் தூதரகத்தில் இருந்த பேக்ஸ் கருவியில், ‘டிராப்மையர்’ என்ற பெயரிலான ரகசிய உளவு கருவி பொருத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக